அஸ்வகோஷ் ஆவணப்படத்தின் உருவாக்கம்: வம்சி, உமா கதிருடன் ஓர் உரையாடல்

தமிழ் எழுத்தாளர் ராஜேந்திர சோழனின் ஆவணப்படத்தை தயாரித்த வம்சி மற்றும் உமா கதிர் ஆகியோருடன் ஓர் உரையாடல்.

14 min read

படைப்பிலக்கியம், நாடகம், தத்துவம், சமூக ஆய்வு எனப் பல்வேறு துறைகளிலும் இயங்கிவரும் நூலாசிரியர் இராசேந்திர சோழன். எழுபதுகளின் தொடக்கத்தில் இலக்கிய வட்டாரத்தில் அறிமுகமானவர் அஸ்வகோஷ் என்கிற புனைப்பெயரிலும் எழுதியுள்ளார். இவரது ஐம்பது சிறுகதைகள் ‘இராசேந்திர சோழன் கதைகள்‘ என்கிற பெயரிலும், மேலும் 41 கதைகள் ‘சவாரி’ என்கிற பெயரிலும் தொகுப்பாக வந்துள்ளன. உதயம், பிரச்னை ஆகிய இதழ்களின் பொறுப்பாசிரியராக இருந்துள்ளார். மண்மொழி என்ற இதழைப் பல ஆண்டுகளாக வெளியிட்டு வந்தார். சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரைகள் எனக் கலை இலக்கியத்திலும் அரசியல், அறிவியல், தத்துவம், களப்போராட்டங்கள் எனப் பொது வாழ்விலுமாக, வாழ்க்கையின் பெரும்பகுதியைச் சமூகச் செயல்பாடுகளால் நிறைத்தவர்.

மண்ணின் மொழியில் நடுநாட்டுக்கதைகளைப் புனையும் எழுத்தாளுமைகளின் ஆதர்சம் இவர். தன் புனைகதைகளை இறுக்கம்கொள்ள வெளிப்படுத்தியதாகச் சிறப்பு பெற்ற இவர், கட்டுரைகள் எழுதும்போது சாதாரண மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எளிமையான நடையைக் கையாள்வதாகப் பாராட்டப் பெறுகிறார்.

சென்ற ஆண்டு இவரின் வாழ்வை ‘அஸ்வகோஷ்’ என்கிற தலைப்பில் ஆவணப்படமாக உருவாக்கினர் வம்சியும் உமா கதிரும். தற்போது சென்னைக் கிறித்துவக் கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியம் மூன்றாம் ஆண்டு படித்துவருபவர் வம்சி. உமா கதிர் சிங்கையில் வசித்து வரும் வாசகர், சிறுகதைகள் எழுத முயற்சிப்பவர் மற்றும் இலக்கியச் செயல்பாடுகளில் ஆர்வமுள்ளவர்.

அஸ்வகோஷ் ஆவணப்படத்தின் முன்னோட்டம்

எழுத்தாளர் இராசேந்திர சோழன், அவரின் குடும்பத்தினர், பல தமிழ் எழுத்தாளர்கள் மற்றும் சமூக அரசியல் செயற்பாட்டாளர்களுடன் நிகழ்ந்த உரையாடல்களின் தொகுப்பே அஸ்வகோஷ் ஆவணப்படம். இவ்வுரையாடல்களின் வழியாக அஸ்வகோஷ் என்கிற ஆளுமை, அவர் எதிர்கொண்ட போராட்டங்கள், சந்தித்த சவால்கள் சித்தரிக்கப்படுகின்றன.

தி வேர்ல்ட் ஆப் அப்பு குழு இந்த ஆவணப்படத்தின் உருவாக்கம், அஸ்வகோஷின் படைப்புகள், எழுத்தாளர்களுக்கான ஆவணப்படங்கள், அவற்றின் முக்கியத்துவம் குறித்து வம்சி மற்றும் உமா கதிருடன் உரையாடியபோது…

எழுத்தாளரைப் பற்றிய ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்களில் உங்கள் மனதிற்கு மிக நெருக்கமானது எது?

உமா கதிர்: அஸ்வகோஷ் ஆவணப்படத்திற்கு முன் எனக்கு எழுத்தாளர் ஜெயகாந்தன் அவர்களின் ஆவணப்படம் மிகவும் பிடித்திருந்தது. காட்சி, ஒலி, ஒளி அமைப்பு, இயக்கம் என எல்லாத்தளத்திலும் மிளிர்ந்த படம் அது. மிகச்சிறந்த கலைஞர்களின் பங்களிப்பிலும் பெரிய பொருட்செலவிலும் உருவாக்கப்பட்ட அதனுடன் இப்படத்தைப் பொருத்திப்பார்க்க முடியாது. இந்த ஆவணப்படம் மிகக் குறைவான நிதியிலிருந்து எளிய பிண்ணனி உடையவர்களின் உழைப்பில் வளர்ந்தது. இரண்டுமே மனதிற்கு மிக நெருக்கமான ஆவணப்படம் எனச் சொல்லலாம்.

ரவி சுப்ரமணியத்தின் இயக்கத்தில் செழியனின் ஒளிப்பதிவில் உருவான எழுத்தாளர் ஜெயகாந்தனின் ஆவணப்படம்

வம்சி: சிறு வயதிலிருந்தே பல ஆவணப்படங்களைப் பார்த்திருக்கிறேன். எழுத்தாளர்களைப் பற்றிய ஆவணப்படங்களை நான் பார்த்தது கிடையாது. ஆவணப்படத்தை freestyle ஆகச் செய்ய வேண்டும் என்பதே என் எண்ணம். நாமே அதற்கு ஒரு வடிவத்தை உருவாக்கலாம் எனத் தோன்றும். நான் சமீபத்தில் பார்த்ததில் எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளரைப் பற்றிய திரைப்படமாக நந்திதா தாஸ் இயக்கிய மண்டோவைக் குறிப்பிடுவேன். மண்டோ எனக்குப் பிடித்த எழுத்தாளர். மண்டோ எழுதிய முக்கியமான சிறுகதைகள் அத்திரைப்படத்தில் அவரின் வாழ்க்கை வரலாற்றுடன் குறும்படங்களாக இழையோடிச் செல்லும். ஓர் எழுத்தாளரைக் கதை எழுதத் தூண்டிய காரணிகளோடு, அப்படி எழுதப்பட்ட கதைகளையும் இணைத்துக் குறும்படங்களாகத் அத்திரைப்படத்திற்குள் வைத்திருப்பார் நந்திதா. மண்டோ திரைப்படத்திலிருந்து பிரித்தெடுத்தாலும் தனித்தனிக் குறும்படங்களாக நிற்கக்கூடியவை அவை. ஓர் எழுத்தாளரின் வாழ்க்கையும் படைப்புகளும் இணைந்திருப்பதால் மண்டோ எனக்கு மிகவும் பிடித்துப்போனது.

அஸ்வகோஷும் அவரது படைப்புலகமும் உங்களுக்கு எவ்வாறு அறிமுகமாயின?

உமா கதிர்: அஸ்வகோஷ் அவர்களின் படைப்புலகம் அறிமுகவாதற்கு முன்னரே அவர் அறிமுகமாகிவிட்டார் என்பதை நான் தாமதமாகவே உணர்ந்தேன். கல்லூரி முடித்து சென்னையில் வேலை தேடிக்கொண்டிருந்த காலத்தில் அவரைச் சந்தித்த நினைவு இருக்கிறது. துண்டுப்பிரசுரம் மூலமாகவோ, அல்லது நண்பர்களின் மூலமாகவோ அது நிகழ்ந்திருக்கலாம் என யூகிக்கிறேன். அந்த நிகழ்ச்சி சென்னை பிலிம் சேம்பரில் நடந்தது. அது ஒரு நூல் வெளியீட்டு விழா. அப்போது எனக்குத் தீவிர வாசிப்புப் பழக்கமும் இலக்கிய அறிமுகமும் ஏற்பட்டிருக்கவில்லை. செய்வதற்கு வேலையொன்றுமில்லை போய்ப் பார்த்து வருவோமே என்று அரங்கத்தில் நுழைந்தேன். இவர்தான் அஸ்வகோஷ், முக்கியமான எழுத்தாளர் என்ற எந்த விஷயமும் எனக்குத் தெரியாது. ஆனால் அன்றைய நிகழ்வில் அவர் பேசிய தோரணை வெகுவாகக் கவர்ந்தது. ஆறடி உயரம், வெண் நீல நிற பைஜாமா, மிகச்சரளமான பேச்சு, குரலில் உள்ள கம்பீரம் என எல்லாமே அவரிடம் கவர்ந்த விஷயங்களாக இருந்தது. அந்த நிகழ்வு சினிமா சம்பந்தப்பட்ட நிகழ்வு என்ற எண்ணத்தில்தான் சென்றேன். சென்ற பிறகுதான் அது நூல் வெளியீட்டு விழா என்பதையே அறிய முடிந்தது. வந்ததும் வந்துவிட்டோம் சிறிது நேரம் அமர்ந்துவிட்டுச் செல்லலாம் என்ற எண்ணத்தில் அமர்ந்து அவரது முழு உரையையும் கேட்ட பிறகுதான் வெளியே வர முடிந்தது. தூரத்தில் இருந்து அவரை ரசித்தது நினைவுக்கு வருகிறது.

அந்த நிகழ்வுக்குப் பிறகு பதினைந்தாண்டுகள் கழித்துதான் அஸ்வகோஷ் எனும் மகத்தான எழுத்தாளனைப் படைப்புகள் வழியே கண்டுகொண்டேன். இந்த இடைப்பட்ட ஆண்டுகளில் நவீன இலக்கியம் குறித்த ஒரு சிறிய திறப்பு நிகழ்ந்தது. அதன் மூலம் எழுத்தாளர்களும் எண்ணற்ற நண்பர்களும் கிடைத்தார்கள். சிங்கப்பூர் வந்து பணிபுரிய ஆரம்பித்தேன். ஒருமுறை இந்தியா சென்றிருந்தபோது முன்பே திட்டமிட்டபடி நான் எழுத்து மூலமாய்த் தரிசித்த எழுத்தாளர்களை நேரில் சந்திக்கலாம் என்ற நோக்கில் ஒவ்வொரு எழுத்தாளரையும் சந்தித்தேன். அப்படியான ஒரு சந்திப்பில் அண்ணன் கண்மணி குணசேகரன் அவர்களைச் சந்தித்துப் பேசி விடைபெறும்போது அவர் பரிசளித்த புத்தகம் ‘இராஜேந்திர சோழன் கதைகள்’ தொகுப்பு.

“நான்லாம் என்னண்ணே எழுதறேன், எதோ போற போக்குல எனக்குத் தெரிஞ்சத எழுதிகிட்டு இருக்கேன். எனக்கு இந்த மாதிரி எழுத முடியும்னு நம்பிக்கை கொடுத்ததே அஸ்வகோஷ் படைப்புகள்தாண்ணே. இந்த மண்ணோட மக்களையும் எழுத்தையும் இலக்கியத்தில் பதித்த முதல் ஆள் இவர்தான்னே. நடுநாட்டின் நாயகர் எனக்கு ஆசான் போன்றவர். இவரை வாசிக்கணும்,” என்று சொல்லி அந்தப் புத்தகத்தைப் பரிசளித்தார்.

உங்கள் மனதிற்கு நெருங்கிய அஸ்வகோஷின் படைப்பு எது? ஏன்?

வம்சி: எனக்கு மிகவும் பிடித்தது ‘எட்டு கதைகள்‘. அவர் எழுதிய கதைகள் அனைத்துமே எனது ஊரைச் சார்ந்தவை – மயிலம், விழுப்புரம், திண்டிவனம், திருவண்ணாமலை. அப்பாவுடன் நான் அங்கு செல்வதுண்டு. அந்நிலத்தில் வேலை பார்ப்பவர்களின் பேச்சை மிக அழகாக ஆவணப்படுத்தியுள்ளார். ஒரு நிலத்தின் மாபெரும் பதிவே அப்புத்தகம். எழுத்தாளர் கோணங்கி அஸ்வகோஷின் மொழியைப் பற்றி நிறைய பேசினார். தனது மண்ணை அவ்வளவு நேசித்து, எந்தவொரு கலப்படமும் இல்லாமல் உருவாக்கிய படைப்பாகவே எட்டு கதைகளை நான் பார்க்கிறேன். எனது ஊர் மக்கள் பேசுவதைப் போலவே இருந்த உரையாடலைக் கொண்ட கதைகள் எனக்குள் ஏற்படுத்திய வியப்பு அப்புத்தகத்தை மனதிற்கு நெருக்கமாக்கியது.

ஒரு புத்தகம் எழுதப்பட்ட காலகட்டம் மிக முக்கியமானது. கண்மணி குணசேகரன், இமையம் போன்ற பல எழுத்தாளர்கள் இப்போது வட்டார வழக்குகளில் எழுதிக்கொண்டிருக்கின்றனர். இவர்களுக்கெல்லாம் அஸ்வகோஷ் முன்னோடியாக இருந்திருக்கிறார். இதனால் இப்புத்தகம் மீதிருக்கும் மதிப்பு கூடுகிறது. அதன் காலப் பின்புலத்தில் வைத்துப் பார்க்கும்போது ‘எட்டு கதைகள்’ மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தெரிகிறது.

உமா கதிர்: அவரின் பெரும்பாலான கதைகளை ஒரே சொல்லில் பகுக்க வேண்டுமானால் அவற்றை ‘உளவியல்’ என்ற சொல்லின் கீழ் பகுக்கலாம். அவற்றை நான் அவ்வாறுதான் புரிந்துகொள்கிறேன். மனிதர்களின் உளவியல் உரையாடலை இத்தனை கச்சிதமாக எழுத்தில் கொண்டுவருவது எளிதல்ல. பெரும்பாலான வாசகர்களுக்கு அவரின் ‘புற்றில் உறையும் பாம்புகள்’ கதையைப் பிடித்த கதையாகச் சொல்வார்கள். இரு பாத்திரங்களின் உரையாடல் நீண்டுகொண்டே போய் ஒற்றைச் வாக்கியத்தில் (“சரிதான் போடி பெரிய பத்தினியாட்டம்!”) கதை முடியும் வகை.

அவரின் மொத்தச் சிறுகதைகளையும் வாசித்தபோது இந்த வகைமையில் மொத்தமாக நான்கு கதைகள் எழுதியிருக்கிறார். ருசிப்பு, இழை, விவஸ்தை போன்ற கதைகளும் உரையாடல் வழி சொல்லப்படும் கதைகள்தான். ஒவ்வொன்றும் அதன் அளவில் முழுமைத்தன்மையுடன் வெளிப்பட்டிருக்கிறது.

அவர் மொழியைக் கையாளும் விதம் பல எழுத்தாளர்களை உருவாக்கியிருக்கிறது என உணர முடிகிறது. வட்டார வழக்குகள் இலக்கியத்திற்குள் நுழைய அவரும் ஒரு முன்னுதாரணமாகத் திகழ்ந்திருக்கிறார். கொங்கு, நாஞ்சில், கோவை, நெல்லை போன்ற நிலங்களில் இருந்து வெளியாகும் படைப்புகள் அம்மக்களின் பேச்சுமொழியை அப்படியே பிரதிபலிப்பதாக இருக்கும். அப்படியான எழுத்தாளர் நடுநாட்டில் இல்லையே என்ற ஏக்கம் அவர் படைப்புகளை வாசிக்காதவரை எனக்கு இருந்தது. மிகவும் தாமதமாக அவர் அறிமுகம் கொண்டது குறித்து வருத்தம் அடைந்திருக்கிறேன்.

அஸ்வகோஷ் எனும் எழுத்தாளரைக் கேள்வியேபட்டிருக்காத ஒருவருக்கு அவரை எவ்வாறு அறிமுகம் செய்வீர்கள்? அஸ்வகோஷின் தனித்தன்மை எது?

உமா கதிர்: நாம் பல படைப்பாளிகளை வாசிக்கிறோம். பல எழுத்துகளைக் கடந்து வந்திருப்போம். ஆனால் ஏதோ ஒரு எழுத்தாளரை தனது அந்தரங்கத் தோழனாக மனம் வரித்துக்கொள்ளும். எழுத்தாளுமை சார்ந்தோ, பேச்சாளுமையோ, அரசியல் காரணங்களுக்கோ, இப்படி ஏதாவது ஒன்று இருக்குமல்லவா? அந்தக் கோணத்தில் பார்க்கும்போது எல்லாத் தளங்களிலும் அவர் பூரணமாக வெளிப்பட்டிருக்கிறார். இது அபூர்வமான விஷயம். இந்த விஷயம்தான் அவரிடம் கவர்ந்தது.

அவருடைய தனித்தன்மைகளாக அவரது சிறுகதைகளைத்தான் கருத முடிகிறது. அவை மிகக் கச்சிதமான வடிவமைப்பு கொண்டவையாக இருக்கின்றன. நேரடியாகக் கதை சொல்லும் உத்தி, மிக எளிமையான உரையாடல்கள் வழியாகக் கதையை நகர்த்திச் செல்லும் விதம். கதையை விட்டு விலகிய ஒரு சொல்கூட இருக்க முடியாத அளவுக்குக் கறார்த்தன்மை கொண்டவை. பாத்திரங்களின் எண்ணவோட்டங்களை நீண்ட விவரிப்புகளின் வழியாகப் பெரிய பத்திகளாக உருவாக்காமல் உரையாடல் வழியே எளிமையாக வாசகனைச் சென்றடையும் வகையிலாக எழுதிச் செல்லும் நுட்பத்தை அவரின் சிறப்பாகச் சொல்லலாம். அவரின் பெரும்பாலான கதைகளின் முடிவில் ஆச்சரியத்தை ஒற்றை வார்த்தையில்தான் முடித்திருப்பார். ஆனால் அவை ஒருபோதும் செயற்கை அதிர்ச்சிகளை உருவாக்கவில்லை என்பதுதான் சிறப்பம்சம்.

வம்சி, உங்களுக்கு முதன் முதலில் சினிமா மீதான ஆர்வம் உருவான தருணம் எது?

வம்சி: எப்போது சினிமா ஆர்வம் ஏற்பட்டது என்று சரியாகச் சொல்லத் தெரியவில்லை. வம்சி புத்தகக் கடையில் உலக சினிமா சி.டி.க்களும் விற்பனை செய்வோம். சிறு வயதிலிருந்தே எல்லோரும் பார்க்கும் ஹாலிவுட் திரைப்படங்களை என் அம்மா என்னைப் பார்க்க அனுமதிக்கவில்லை. அனுமதிக்கவில்லை என்று சொல்வதைவிட உலக சினிமா சி.டி.களே அதிகம் இருந்தன. குறிப்பாக ஈரானிய, ஸ்பானிஷ், பிரெஞ்சுத் திரைப்படங்கள். அவற்றையே முதன் முதலில் பார்க்கத் துவங்கினேன். சினிமாவில் ஆர்வமுள்ள பல இயக்குநர்கள் அடிக்கடி வீட்டுக்கு வந்து செல்வார்கள். அவர்களுடன் உரையாடுவேன். நானாகத் தேடிச் சென்றதைவிடத் தானாகவே உருவான தருணம் அது. ஒரு பூ எந்தத் தருணத்தில் பூத்தது என்று உறுதியாகச் சொல்ல முடியாது. ஒரு பூ போல எனது சினிமா ஆர்வம் மெல்லப் பூத்தது. அப்பூவிற்குத் தேவையான உரமும் சூரிய வெளிச்சமும் தண்ணீரும் முன்பே இருந்தன.

வம்சி

ஆவணப்படம் உருவாக்கும் எண்ணம் உதித்த தருணத்திலிருந்து, அது தயார் ஆகும்வரை, உங்களின் பயணம் பற்றிச் சொல்லுங்கள்.

உமா கதிர்: இணையத்தில் அவ்வப்போது ஜெயகாந்தனின் ஆவணப்படத்தைப் பார்ப்பதுண்டு. அடிக்கடி பார்க்கும் காணொளிகளில் முக்கியமானது அது. எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காதது. செழியனின் ஒளிப்பதிவில் ரவி சுப்ரமணியம் இயக்கியது. அப்படி ஓர் ஆவணப்படம் எடுக்க நினைத்தோம். ஆனால் அது அவ்வளவு எளிதல்ல என உணர காலம் தேவைப்பட்டது. முதலில் கண்மணி குணசேகரன் அண்ணனிடமே எல்லாவற்றையும் ஒப்படைத்துவிடுவோம், அதற்காகும் செலவுகளை நான் ஏற்பாடு செய்வது என்று முடிவானது. ஆனால் கண்மணி இந்தத் தளத்தில் நான் இயங்கியதில்லை அது சரியாக வராது என அஞ்சினார்.

அந்தச் சமயம் வம்சி இயக்கிய ‘வலி’ என்ற குறும்படத்தைக் கண்டேன். பிரபஞ்சனின் சிறுகதை ஒன்றை அடிப்படையாகக் கொண்ட கதையைக் குறும்படமாக்கியிருந்தான். அப்போது வம்சிக்கு வயது பதினாறுதான். பள்ளி விடுமுறையில் எடுத்த குறும்படம் அது. வம்சியை மிகச்சிறிய வயதில் இருந்தே அறிவேன். அவனிடமிருந்து வெளிப்பட்ட இந்தப் படைப்பு ஆச்சரியத்தை அளித்தது. வம்சியிடம் ஆவணப்படம் குறித்துச் சொல்லி எடுத்துத் தர முடியுமா என்று கேட்டேன். இதெல்லாம் பெரிய விஷயம் அண்ணா என்னால் முடியும் என்று தோன்றவில்லை என்றான். பிறகு எழுத்தாளர் சந்திப்பு வரிசையில் பிரபஞ்சன் அவர்களை நேரில் சந்தித்தபோது அவரிடம் இந்த ஆவணப்படம் குறித்து உரையாடினேன். மிகுந்த மகிழ்ச்சியோடு, “இதைக் கட்டாயம் செய்ய வேண்டியது நமது கடமை. நான் எழுத வந்த காலத்திலேயே அவர் எனக்கு ஆதர்சமாக விளங்கியவர். அவருக்குக் கண்டிப்பாக நாம் மரியாதை செய்ய வேண்டும்,” என்று உறுதியாகச் சொல்லி வம்சிக்கு அங்கிருந்தே தொலைபேசி நீ இதைச் செய்ய வேண்டும் என்று உரிமையோடு கேட்டுக்கொண்டார். அந்தப் புள்ளியில் ஆரம்பமானதுதான் இந்த ஆவணப்படம்.

இதில் மகிழ்ச்சிகொள்ள முடியாதது இவ்வளவு முனைப்பு காட்டிய பிரபஞ்சன் அவர்களை இந்த ஆவணப்படத்தில் பேச வைக்க முடியாததுதான். ஆவணப்படம் ஆரம்பிக்கும்போது நோய்வாய்ப்பட்டிருந்தார். பிறகு அவரால் அதிகம் பேச முடியவில்லை. பிறகு அவர் பேசவேயில்லை. இதேபோல இன்னொரு இழப்பு என்றால் அஸ்வகோஷ் அவர்களின் துணைவியார் மறைந்தது. அஸ்வகோஷ் அவர்களைச் சந்திக்கச் சென்றபோது அத்தனை அன்பாக உபசரித்த அவரின் துணைவியார் இந்த ஆவணப்படத்தில் இடம்பெற வேண்டியவர்கள் பட்டியலில் முதன்மையானவர். பிரபஞ்சனும் அஸ்வகோஷ் அவர்களின் மனைவியும் இப்படத்தில் இல்லாதது பேரிழப்பு. இந்த இடத்தில்தான் ஆவணப்படத்தின் முக்கியத்துவத்தை உணர வேண்டும். சாகித்திய அகாதமி விருது வென்ற பிரபஞ்சனுக்கு ஆவணப்படமில்லை. இதை அரசுகள்தான் செய்ய வேண்டும். ஒரு அரசாங்கம் நின்று செய்ய வேண்டிய வேலையை நாம் செய்துகொண்டிருக்கிறோம் என்ற வேகம் உண்டாக்கியது கண்மணியும் பிரபஞ்சனும்தான்.

முதலில் பட்டியல் ஒன்றைத் தயாரித்து யாரெல்லாம் இதில் பேச வேண்டும் என முடிவெடுத்தோம். வம்சி தனக்குக் கிடைத்த கல்லூரி விடுமுறைகளில் கேமராவை வாடகை எடுத்துக்கொண்டு கிளம்பிவிடுவான். எழுத்தாளர்களின் இருப்பிடங்களுக்கே சென்று படம்பிடித்து வருவான். படப்பிடிப்புகளின்போது இந்தப் பட்டியல் நீண்டது. முதல் பட்டியலில் இலக்கியம் சார்ந்து உள்ளவர்களே இடம்பெற்றிருந்தார்கள். பின்னர் அஸ்வகோஷின் அரசியல் சார்ந்த தோழர்கள் பட்டியலுக்குள் வந்தார், அவரோடு முரண்பட்டவர்கள் என அவரின் சகலப் பரிமாணங்களும் படத்துக்குள் இடம்பெற ஆரம்பித்தன.

எதேச்சையாக ஒரு புள்ளியில் ஆரம்பித்த இந்த ஆவணப்படம் தன்னளவிலே வளர்ந்து அதன் இறுதிக்கட்டதைத் தானே அடைந்துகொண்டது என்பதுதான் உண்மையாக இருக்கும். என்னுடைய பயணம் இதன் ஆரம்பத்திலும் இறுதியிலும் சில கணங்கள் மட்டுமே. இதன் ஊடாக ஆரம்பத்திலிருந்து இறுதி வரை பயணமானவன் வம்சி ஒருவன் மட்டுமே. இந்தத் தருணத்தில் வம்சியை மட்டுமே மனம் மொழிகிறது. நடுவில் குழப்பம், தேக்கம், நிறுத்தம், தொடர்ச்சி என அங்கங்கே ஓய்வெடுத்து முடித்திருக்கிறோம். இந்த ஆவணப்படம் சாத்தியமாக நிறைய பேர் உழைத்திருக்கிறோம். குறிப்பாக நான் கேட்கும்போதெல்லாம் பண உதவி செய்த நண்பர்களை நான் பெற்றிருப்பதை உணர்ந்த நொடி மிக நெகிழ்ச்சியானது.

அஸ்வகோஷை நேரில் சந்தித்த அனுபவத்தைப் பற்றி சொல்லுங்கள்.

உமா கதிர்: எழுத்தாளர்களைச் சந்திக்க நான் சென்ற பயணத்தில் அஸ்வகோஷும் இருந்தார். அவர் இருந்த தெருவில் அவரை யாருக்கும் தெரியவில்லை. விலாசம் மாறி வந்துவிட்டோமா என்ற குழப்பத்தில் நான் அந்தத் தெருவையே சுற்றிக்கொண்டிருந்தேன். கண்மணியிடம் உறுதி செய்துகொண்டு மீண்டும் அத்தெருவிலேயே விசாரித்தும் பயனில்லை. ஒரு கட்டத்தில் திரும்பிவிடுவோமா என்றுகூட நினைத்த நேரத்தில் அவராகவே வீட்டிலிருந்து வெளியே வந்து என் கரம்பிடித்து அழைத்துச் சென்றார். இத்தனை புத்தகங்கள் எழுதிய ஒருவரை அத்தெருவில் உள்ளவர்களுக்கே தெரியவில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் நிலை.

தான் எழுத்தில் தரிசித்த எழுத்தாளனை நேரில் சந்திக்கும்போது எவ்வகையான உணர்வு மேலிடுமோ அதைத்தான் நானும் உணர்ந்தேன். அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகள் என எதுவும் என்னிடமில்லை. ஆகவே பதட்டமடைய வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கவில்லை. இயல்பான ஒரு சந்திப்பாகத்தான் அது இருந்தது. முதல் முறையாகச் சந்தித்த ஒருவரிடம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வு தோன்றாமல் மிகவும் அண்மையுடன் பேசினார். அவரின் கதைகள் குறித்தும் அது எழுதப்பட்ட காலத்தில் அவரின் மனநிலை குறித்தும் பேசிக்கொண்டோம். குறிப்பாக அவரது எழுத்தில் பாலியலைப் பிரதானமாகவும் ஆனால் பாலியல் சொற்கள் இல்லாமல் தவிர்த்த கதைகளைப் பற்றிக் கேட்டது நினைவிருக்கிறது.

அஸ்வகோஷும் உமா கதிரும்

அன்று நான் சந்தித்தபோது அவர் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். பேச்சு தெளிவாகப் புரியவில்லை. பேசிக்கொண்டிருக்கும்போதே இடையில் மறந்துவிட்டிருந்தார். ஆனால் ஒரு எழுத்தாளனைச் சந்திக்க இத்தனை தூரம் பயணப்பட்டிருந்த விஷயம் அவருக்கு மகிழ்ச்சி உண்டாக்கியது. நான் அவரின் கதைகள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன். அது எழுதப்பட்ட காலம் குறித்து அறிய ஆவலாக இருந்தது. பெரும்பாலான கதைகள் எழுபதுகளில் ஆரம்பித்து எழுபதுகளின் இறுதியிலேயே எழுதப்பட்டுவிட்டன. எழுதப்பட்டு இத்தனை காலம் கடந்தும் ஒரு வாசகன் அறிய ஏராளமான ஆச்சரியங்களை உள்ளடக்கியிருந்தது.

அவரைச் சந்தித்து திரும்பிய பின்னர் கண்மணியிடம் எனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன். இத்தனை புகழ்பெற்ற கதைகளை எழுதிய ஒரு எழுத்தாளரை ஏன் இந்த சமூகம் புறக்கணித்திருக்கிறது என்ற காரணத்தை விளங்கிக்கொள்ள முடியவில்லை. அதில் அரசியல் காரணங்கள் இருக்கலாம் என்றாலும் அதையும் தாண்டி அவரின் படைப்புகளை அல்லவா இந்த சமூகம் கைகொண்டிருக்க வேண்டும். ஏன் இது நிகழவில்லை என்ற உரையாடலின் நடுவே ஆவணப்படம் எடுக்கலாம் என்ற எண்ணம் உண்டானது.

வம்சி, சிறு வயதிலிருந்தே இலக்கியச் சூழல்கொண்ட வீட்டில் வளர்ந்தது, எழுத்து, இலக்கியம், எழுத்தாளர்கள் குறித்து உங்கள் மனதில் எம்மாதிரியான பிம்பத்தை உருவாக்கியுள்ளது? எழுத்தாளர்களைப் புரிந்துகொள்வதற்கு இது உதவியதாக நினைக்கிறீர்களா?

வம்சி: என் சிறு வயதிலேயே பல எழுத்தாளர்களும் கலைஞர்களும் என் வீட்டுக்கு வருவதுண்டு. பிற விருந்தாளிகள் வரும்போது இல்லாத பரவசத்தை எழுத்தாளர்கள் வரும்போது என் அப்பா அம்மா அடைவதை நான் பார்த்திருக்கிறேன். இவ்வளவு வித்தியாசமாக இருக்கிற இவர்கள் யார் என எனக்குள் கேள்வி எழும். அவர்களுடன் நானும் உரையாடுவேன், அவர்கள் பேசுவதையும் கவனிப்பேன். இரவு முழுக்கச் சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து கை காய்ந்த பிறகும் கதைகள் பேசிக்கொண்டே இருப்பார்கள். என்னைச் சிறு குழந்தையாகவே எல்லா எழுத்தாளர்களும் பார்த்திருக்கிறார்கள். அஸ்வகோஷ் ஆவணப்படம் எடுக்கும் வேளையில், “நீதானா அது? குழந்தையாகப் பார்த்தது,” என மிகவும் அன்புடன் பேசினார்கள். மிகவும் இயல்பாக ஒரு குடும்பத்துக்குள் நுழைந்தது போலிருந்தது. நான் நேர்காணல் செய்த எந்த எழுத்தாளரும் எனக்கு அந்நியமாகத் தோன்றவில்லை. சொந்த பெரியப்பா, சித்தப்பா, மாமா, அண்ணன் போன்றோரைப் படம் பிடித்த உணர்வே இருந்தது. சந்தோஷமாகவும் இருந்தது. எதுவுமே சடங்கு போல் இல்லாமல் எழுத்தாளர்களின் வீட்டுக்குப் போவதும் மதியம் உணவருந்துவதும் உரையாடுவதும் என இயல்பாகவும் அன்புடனும் இருந்தன எனது சந்திப்புகள்.

இந்த ஆவணப் படத்திற்கு நேர்காணல் செய்யவேண்டிய எழுத்தாளர்களை எவ்வாறு தேர்வு செய்தீர்கள்?

உமா கதிர்: இதற்கு முன் எடுக்கப்பட்டிருந்த ஆவணப்படங்களைப் பார்த்த அடிப்படையிலும் தமிழின் சமகால இலக்கியச் செயல்பாடுகளின் மூலம் அறியப்பட்டவர்களின் பட்டியல் மூலமும் தேர்வு செய்தோம். ஆனால் அதையும் தாண்டி படப்பிடிப்பின் இடையில் இவர்களின் குரலும் முக்கியமானது என உணர்ந்தவர்களின் பட்டியலும் இணைந்துகொண்டது. ஆரம்பப் பட்டியலில் மிகக்குறைவாவர்களே இடம்பெற்றிருந்தார். அதிலும் முக்கியமாக சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோரின் பதிவு முக்கியம் என நினைத்தோம். அவர்களைத் தொடர்புகொள்வது மிகச் சிரமமாக இருந்தது. சக எழுத்தாளனின் ஆவணப்படத்தில் தனது கருத்தைப் பதிவது அவசியம் என்ற உணர்வு ஏற்படாமல் இருப்பது குறித்து வருத்தம் அடைந்தோம்.

இந்த ஆவணப்படத்திற்கு இரண்டு வருடங்களாகப் பல எழுத்தாளர்களை நேர்காணல் செய்தீர்கள். எப்படி இதைத் திட்டமிட்டீர்கள்? தொடர்ந்து செயல்பட்டு இதை முடிக்க வேண்டும் என்ற ஊக்கம் எங்கிருந்து வந்தது? கேள்விகளை முன்பே எழுத்தாளர்களுக்கு அனுப்பி வைத்தீர்களா? அல்லது அஸ்வகோஷைப் பற்றித் தோன்றுவதைப் பேச விட்டுவிட்டீர்களா?

வம்சி: இந்த இரண்டு ஆண்டுகள் இதைப் பற்றி மட்டுமே சிந்தித்து வேலை செய்யவில்லை. முதல் ஆண்டு கல்லூரி தொடங்கும்போது முதல் நாள் ஒளிப்பதிவு செய்தோம். கல்லூரி வாழ்க்கை எனக்கொரு புதிய அனுபவம். அதை விடமுடியவில்லை. இதையும் விட விருப்பமில்லை. இந்த இரண்டு ஆண்டுகளில் எப்போதெல்லாம் கேமரா வாடகைக்குக் கிடைக்குமோ, காசு கொஞ்சம் சேருமோ அப்போதெல்லாம் வேலை செய்தோம். எப்போதெல்லாம் எழுத்தாளர்களால் உரையாட இயலுமோ அப்போதெல்லாம் சென்று சந்தித்தோம். போதிய அளவு நிதி இல்லாததால் அரசுப் பேருந்தில் ஒவ்வொரு இடமாக சென்றுதான் படம் பிடித்தோம். இப்படிச் செய்து முடித்ததுதான் இந்த ஆவணப்படம். இதை முடிப்பதற்கு முக்கிய காரணம் இதைத் துவங்கிவைத்த உமா கதிர் அண்ணன். அடிக்கடி என்னைத் தொலைபேசியில் அழைத்துச் சீக்கிரம் முடிக்க வேண்டும் என ஊக்குவிப்பார்.

இந்தப் படத்தின் தொகுப்பாளரிடம், “இரவெல்லாம் உறக்கம் வருவதில்லை. திடீரென்று முழித்துக்கொள்கிறேன். நாம் இந்தப் படத்தை முடிக்கும் முன்னர் அஸ்வகோஷ் ஐயாவிற்கு ஏதேனும் நேர்ந்துவிட்டால்… சீக்கிரம் நாம் இதை முடிக்க வேண்டும்,” என்று சொல்லிக்கொண்டே இருப்பேன். அந்தவொரு பயமும் உந்தியது. அஸ்வகோஷ் ஐயாவின் ஆவணப்படத்தை அவரே முதல் வரிசையில் அமர்ந்து பார்க்க வேண்டும் என்கிற ஆசைதான் படத்தை முடிக்கத் தூண்டியது. இந்த ஆவணப்படத்தின் சிறப்பு அந்தப் படைப்பாளியின் கண்முன்னேஅது வெளியிடப்பட்டதுதான்.

படத்தொகுப்பு செய்யும்போது இந்த ஆவணப்படத்திற்கென ஒரு கதை வடிவம் கொண்டுவருவதற்குக் கவனமாக வேலை செய்தோம். நேரம் போவது தெரியாமல் ஓர் அறைக்குள்ளேயே அமர்ந்து, எடுக்கப்பட்ட காட்சிகளை மீண்டும் மீண்டும் பார்த்து, எதை நீக்குவது, எதைச் சேர்ப்பது என ஆராய்ந்தோம். எழுபது ஆண்டுகால வாழ்வை ஒரு மணி நேரதிற்குள் எப்படிப் பார்வையாளர்களுக்குக் கடத்துவது? இதுவே எங்கள் முன் இருந்த மிகப் பெரிய சவால்.

முதன் முதலில் அஸ்வகோஷ் ஐயாவைச் சந்திக்கும்போது பத்து கேள்விகள் தயாரித்து அவரிடம் கேட்டோம். அந்தக் கேள்விகளுக்கான பதில்களில் பல ஆவணப்படத்தில் இடம்பெறவேயில்லை. அவர் பேசுவதை எளிதாக்கவே அந்தக் கேள்விகளைக் கேட்டோம். அந்தப் பத்து கேள்விகளை அடித்தளமாகக் கொண்டு அவர் பிறப்பிலிருந்து அனைத்துச் சம்பவங்களைப் பற்றியும் கேட்கத் துவங்கினோம். அந்தப் பத்து கேள்விகளும் வேர்கள் போல மரத்திலிருந்த அனைத்துக் கிளைகளையும் வளர்க்க உதவின.

பிற எழுத்தாளர்களிடம் எந்தக் கேள்விகளையும் முன்கூட்டியே தெரிவிக்கவில்லை. அஸ்வகோஷ் ஐயாவைப் பற்றிய ஆவணப்படம் செய்கிறோம் என்று மட்டுமே குறிப்பிட்டோம். அந்தந்த எழுத்தாளரின் வீட்டுக்குச் சென்று முதலில் அஸ்வகோஷைப் பற்றித் தெரிந்த அனைத்தையும் சொல்லச் சொல்லிக் கேட்டோம். வேறு எந்தக் கேள்விகளும் கேட்கவில்லை. அவர் சொல்லி முடித்தபின் கேமிராவை அணைத்துவிட்டுச் சில கேள்விகளைக் கேட்டோம். ஆவணப்படம் பயணிக்க வேண்டிய ஒரு பாதை மனதில் இருந்தது. அதை வைத்துச் சில கேள்விகளைக் கேட்டோம். அதற்கு எழுத்தாளர்கள் பதில் அளித்தனர். சில எழுத்தாளர்கள் நாங்கள் கேட்கப் போகும் கேள்விகளை ஊகித்துப் பதில்களை முதலிலேயே சொல்லிவிட்டனர். இது ஓர் அழகான அனுபவம்.

அஸ்வகோஷின் வாழ்விலிருந்து நீங்கள் கற்றுக்கொண்ட முக்கியமான பாடம்?

வம்சி: தாஸ்தோவ்ஸ்கி சொன்னது நினைவுக்கு வருகிறது, “Above all don’t lie to yourself.” எல்லாவற்றையும் தாண்டி உனக்கு நீ உண்மையாக இரு. நான் பார்த்த மனிதர்களில் அஸ்வகோஷ் ஐயா தனக்கு அவ்வளவு உண்மையாக இருக்கும் மனிதர். எழுத்தும் வாழ்வும் வேறுவேறாக இல்லாமல், இரண்டும் ஒரே பாதையெனப் பயணித்த மனிதர். பலர் கலப்புத் திருமணங்களையும் காதலையும் ஆதரித்துப் பேசுவார்கள். வீட்டுக்குள் நுழையும்போது வேறொருவராக மாறிவிடுகிறார்கள். தனது குழந்தைகளைத் தனது ஜாதிக்குள்ளேயே திருமணம் செய்துகொடுப்பார்கள். அஸ்வகோஷ் ஐயா வெளியில் பேசியதையே வீட்டுக்குள்ளும் செய்திருக்கிறார். தனது குடும்பத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களின் ஜாதிச் சான்றிதழ்களையும் ஒன்றுதிரட்டி, அவற்றில் இல்லாத ஒரு ஜாதியிலிருக்கும் பெண்ணைக் கண்டடைந்து தனது மகனுக்குத் திருமணம் செய்துவைத்தார். தனது கொள்கை மீது அப்படியொரு பற்று அவருக்கு. யாரும் அவரிடம் சென்று கேள்வி கேட்கப் போவதில்லை. தான் பேசிய கருத்துகளின்படி தனது மொத்த வாழ்வையும் நடத்திய மனிதர். இது எனக்கு வியப்பாக இருந்தது.

மக்களுக்காகப் போராடுவதற்கு எழுத்து மட்டுமில்லாமல் களப்பணியிலும் இறங்கியவர். ஏதாவதொரு விதத்தில் மக்களுக்கு உதவிட முடியுமா, மாற்றம் கொண்டுவர இயலுமா என்கிற எண்ணமும் நம்பிக்கையும் அஸ்வகோஷ் ஐயாவைப் பார்க்கும்போதெல்லாம் துளிர்விட்டுக்கொண்டே இருக்கும். சகக் கலைஞனுக்கு அவர் அளிக்கும் அங்கீகாரமும் மேன்மையும், கலையில் ஏதோவொன்று சரியில்லை எனில் நண்பனாக இருந்தாலும் அதைத் துல்லியமாக விமர்சிக்கும் தன்மையும் அவரது இயல்பு. தனது கலைக்கு உண்மையாக இருக்கும் கலைஞர்களைப் பார்ப்பது அரிதாக இருக்கும் இந்தக் காலகட்டத்தில் அஸ்வகோஷ் ஐயாவிடமிருந்து இதைக் கற்றுக்கொண்டோம். தனக்கு விரோதியாக இருக்கும் ஒருவர் சிறப்பான ஒரு கதை எழுதினால் அதைத் தூக்கி கொண்டாடியும் உள்ளார். கலையில் எந்தவித வேறுபாடுகளும் பார்க்காத கலைஞராக வாழ்ந்துவருகிறார்.

ஆவணப்படத்தைச் செய்து முடிக்கும் நேரம், அஸ்வகோஷ் பற்றி உங்களுக்கு இருந்த பிம்பமும் புரிதலும் எவ்வாறு மாறி இருந்தது?

வம்சி: ஆவணப்படம் எடுக்கும் முன்னர் எனக்கு அஸ்வகோஷ் ஐயாவைத் தெரியாது. ஒரு வயதான எழுத்தாளர் என்று மட்டுமே நான் அறிந்திருந்தேன். அவரைத் தேடிச் சென்று, அவரின் வாழ்க்கையை முழுதாகப் புரிந்துகொண்டது ஒரு பயணம் போன்றது. படத்தொகுப்பிற்கு அமரும்போதுதான் எவ்வளவு பெரிய மனிதரைப் பற்றிய படம் செய்திருக்கிறோம் என உணர்ந்தோம். அதன் பின்னர் மேலும் பொறுப்புடன் வேலை செய்து ஆவணப்படத்திற்கு ஓர் உருவத்தைக் கொண்டுவந்தோம். அவரைப் பற்றி முன்கூட்டியே தெரிந்திருந்தால் பிம்பம் உடையவோ மாறவோ வாய்ப்பிருந்திருக்கும். ஓர் எழுத்தாளர் என்கிற அறிதலுடன் மட்டுமே இந்த ஆவணப்படத்தை எடுக்கத் துவங்கினோம். இலக்கியத்திலும் அரசியலிலும் இயங்கியவர் எனப் பின்னர் தெரிய வந்தது. எடுத்து முடித்த பிறகுதான், இவர் ஆவணப்படுத்த வேண்டிய முக்கியமான மனிதர் எனத் தெரிய வந்தது. அவரது பிம்பமும் மேன்மையும் ஆளுமையும் பெரிதானதே தவிர எந்தவிதத்திலும் குறையவில்லை. அவரை இன்னும் அதிகமாகக் காதலிக்க ஆரம்பித்தோம்.

நிதிக் கட்டுப்பாட்டினால் இந்த ஆவணப்படத்தில் நீங்கள் செய்ய நினைத்த ஏதோவொன்று விட்டுப்போனதா? ஆவணப்படம் நிறைவளிக்கிறதா?

வம்சி: இன்னும் கொஞ்சம் பணமிருந்திருந்தால் நல்ல ஒலிவாங்கியைப் பயன்படுத்தியிருக்கலாம், கலர் கரெக்ஷன் செய்திருப்போம். நான் குறிப்பிட்டிருக்கும் இந்த இரண்டு விஷயங்களுமே இந்த ஆவணப்படத்தைப் பாதிக்கவில்லை. இருப்பதை வைத்து ஒரு மனிதனையோ, நிலத்தையோ, வாழ்க்கையையோ ஆவணப்படுத்துவதே ஆவணப்படம். நிறைய செலவு செய்து, உலகத்திலிருக்கும் சிறப்பான ஒரு கேமரா, துல்லியமான ஒலி உபகரணங்களை வைத்துச் செய்யவோ, கலரிங் செய்து அழகு சாதனப் பொருள் போலாக்கவோ வேண்டிய எந்தத் தேவையும் இல்லை. ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதத்தில் கேரளாவில் நிகழும் சர்வதேச ஆவணப்படம் மற்றும் குறும்பட விழாவிற்கு நான் சென்றுவருகிறேன். அங்கு நான் பார்க்கும் பல ஆவணப்படங்களைக் கைபேசியில் சாதாரணமான கேமராவை வைத்து, எல்லோருக்கும் புரியும் அளவிற்கான ஒலியுடன் எடுக்கப்பட்ட படங்களைக் காண்கிறேன். தேவையில்லாதவற்றை நீக்குவதே ஆவணப்படத்தின் முதல் தேவை. ஆவணப்படுத்துதலே அதன் முக்கிய நோக்கம். ஒரு முதியவரோ உடல் நலம் அற்றவரோ பேசினால் ஒலி சற்றுத் தெளிவற்றுதான் இருக்கும். ஆனால் நாம் உன்னிப்பாகக் கவனித்தால் நம்மால் புரிந்துகொள்ள முடியும்.

அஸ்வகோஷ் எனக்கு நிறைவளிக்கும் ஓர் ஆவணப்படம். நிறைவில்லாவிட்டால் தொடர்ந்து அதில் வேலை செய்திருப்போம், வெளியிட்டிருக்க மாட்டோம். இதில் நிறைய குறைகள் இருக்கலாம். ஆனால் எனக்குள்ள நிறைவு, இதை யாருமே செய்யவில்லை நாம் முதலில் செய்தோம் என்பதே. எங்களின் முயற்சியில் தவறுகள் இருக்கலாம், ஆனால் இந்தப் படம் மூலம் இவரைப் பற்றித் தெரியாத இரண்டு பேராவது இவரை வாசிப்பார்கள் இல்லையா? சென்னையில் நிகழ்ந்த இந்த ஆவணப்படத் திரையிடலுக்கு வந்த எனது கல்லூரி நண்பர்கள் சிலருக்கு அஸ்வகோஷ் என்றால் யாரெனத் தெரியாது, தமிழ் இலக்கியப் பரிச்சயம் கிடையாது. அவர்கள் ‘எட்டு கதைகள்’ புத்தகத்தை வாங்கிச்சென்று அன்றிரவே படித்துமுடித்தனர். இது எனக்கு மிகுந்த நிறைவளிக்கிறது. தொழில்நுட்பத் தவறுகளைத் தாண்டி, ஒரு படைப்பு சக மனிதனுக்குப் பயன்படும்போதுதான் அதன் மதிப்பு கூடுகிறது. சிறந்த தொழில்நுட்பக் கருவிகளை வைத்து எடுக்கப்படும் படைப்புகள் சமூகத்திற்கு எந்தளவுக்குப் பயன்படுகின்றன என்பது தெரியவில்லை. சிறப்பான கேமரா எதுவுமில்லாமல், ஒரு காலர் மைக் வைத்து எடுத்த படம், ஒரு மனிதனை இலக்கியம் நோக்கித் திருப்புகிறது என்றால், அதைவிடப் பெரிய நிறைவு படைப்பாளிக்கு இருக்க முடியாது. அவ்வளவு சந்தோஷம் அளிக்கக்கூடிய ஒன்றாக இதை நான் பார்க்கிறேன். இந்த நிறைவும் சந்தோஷமும் இந்த வயதில் என் கையில் வைத்துக்கொள்ள முடியாதவையாகத் தோன்றுகின்றன.

அஸ்வகோஷ் ஆவணப்பட வெளியீட்டு விழாவில் வம்சி

உமா கதிர்: நிதி திரட்டுதல் என்பது பெரிய சொல். திரட்டும் அளவுக்கெல்லாம் நிதி தேவைப்படவில்லை. முடிந்த வரை சொந்தக்காசைப் போட்டு எடுக்க வேண்டும் என்றுதான் முதலில் நினைத்தேன். பிறகு நண்பர்களிடம் இந்த ஆவணப்படம் குறித்து பகிரும்போது தாமாக முன்வந்து உதவுவதாகச் சொன்னார்கள். முகநூலில் இதைக் குறித்து எழுதினேன். பெரிதாக எதுவும் கிடைக்கவில்லை.

ஆரம்பம் முதலே மிக எளிமையாகத்தான் ஆரம்பித்தோம், பொதுப்பேருந்து, ஷேர் ஆட்டோ, வாடகை கேமரா என்று பயணப்பட்டதால் பெரிய செலவுகள் இல்லை. இந்த ஆவணப்பட உருவாக்கத்தின்போது உதவிய நண்பர்கள் அதிகபட்சம் பத்துபேர் இருப்பார்கள். அதில் சில நண்பர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட முறை உதவியிருக்கிறார்கள். ஒவ்வொரு விடுமுறை ஆரம்பமாகும்போதும் வம்சிக்குத் தொலைபேசியில் அழைத்து எவ்வளவு தேவைப்படும் என்று அறிந்து அதன் பின்புதான் நிதி சேகரிப்பில் ஈடுபடுவேன். இரண்டாண்டு காலப் படப்பிடிப்பின் இடையே தேவைப்படும் எந்த விஷயத்தையும் நிறைவேற்ற முயற்சித்திருக்கிறோம். நிதிக் குறைபாடுகளால் செய்ய முடியாத விஷயங்கள் என்றால் தொழில்நுட்ப உபகரணங்கள்தான், தெளிவாகப் பதிவாகும் வகையில் ஒலிப்பதிவுக்கருவிகள் உபயோகித்திருக்கலாம் என்ற எண்ணத்தைத் தவிர வேறொன்றும் இல்லை.

இத்தனை குறைவான நிதியில் இவ்வளவு தரமாகத் தயாரித்திருக்கிறோம் என்ற உணர்வுதான் இப்படத்தின் மூலம் பெற்றது. விட்டுப்போனது என்ற எண்ணம் இல்லை. பிரபஞ்சன்கூடத் தன் இறுதிநாட்களின் மேடைப்பேச்சில், “மூன்று வேளையும் உணவு கிடைத்திருந்தால் இன்னும் கொஞ்சம் எழுதியிருப்பேன்,” என்றுதான் சொன்னார். இலக்கியம் சார்ந்த செயல்பாடுகள் அனைத்துக்கும் இது பொருந்தும். இன்னும் கொஞ்சம் நிதியும் காலமும் கிடைத்திருந்தால் இதைவிட மேம்பட்ட தொழில்நுட்பத்தின் உதவியால் வேறொரு பரிமாணத்தில் இந்த ஆவணப்படம் வெளிப்பட்டிருக்கலாம், ஆனாலும் இது எங்களைப் பொருத்தவரை நிறைவைத் தந்தது என்பதுதான் உண்மை.

அஸ்வகோஷின் படைப்புகளைத் திரைப்படங்களாக்கும் திட்டங்கள் ஏதேனும் இருக்கின்றனவா? அப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தால் அவரின் எந்தக் கதையை தேர்ந்தெடுப்பீர்கள்?

உமா கதிர்: திரைப்படங்களாக்கும் திட்டம் பற்றி சினிமா சார்ந்து இயங்குபவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். குறும்படமாக எடுக்கும் வாய்ப்பு அமையும் பட்சத்தில் அவரின் ‘மதறாசும் மன்னார்சாமியும்’ என்கிற கதையைக் குறும்படமாக எடுக்கும் எண்ணம் தோன்றியது. ஆனால் எந்தளவு சாத்தியம் என்று தெரியவில்லை. தங்கள் பகுதியைச் சேர்ந்த மந்திரியிடம் சிபாரிசுக் கடிதம் வாங்க கிராமத்தில் இருந்து நகரத்திற்கு வரும் தந்தை, மகன் படும் அல்லல்கள்தான் கதை. எழுபதுகளின் சென்னையை அப்படியே பிரதிபலிக்கும் கதையாக இருக்கும். கடந்து வந்த அல்லது நாம் காணாத நகரத்தின் மற்றொரு முகத்தையும் பதிவு செய்யும் இக்கதை.

வம்சி: எனக்கு அஸ்வகோஷ் ஐயாவின் கதைகளைவிட அவரின் வாழ்க்கையை ஒரு திரைப்படமாக எடுக்க வேண்டும் என்கிற ஆசை உள்ளது. அவரின் வாழ்க்கை ஓர் அழகான கதை. தனது வீட்டுக்குப் பக்கத்திலிருக்கும் ஒரு சிறிய நூலகத்தில் படிக்க ஆரம்பித்து, ஒரு சிறுகதை எழுதி, தனக்கு மிகப் பெரிய ஆசானாக இருக்கும் ஜெயகாந்தனிடம் விருது வாங்கி, அதன் மூலம் கவனம் பெற்று, ஓர் அரிதான புத்தகத்தை வாசித்து, அது அவரின் சிந்தனைகளை மாற்றி, பொதுவுடைமைக் கொள்கைப் புரட்சியின் பாதைக்கு அவரின் பார்வையை மாற்றி, அந்தப் பாதையில் பயணித்து, அதில் ஓர் உச்சத்தை அடைந்து, அடிபட்டுத் திரும்பிவந்து இருக்கும் ஒருவரின் வாழ்க்கை அழகானது. அஸ்வகோஷின் இந்த வாழ்க்கை வரலாற்றை ஒரு திரைப்படமாக்கும் ஆர்வம் உள்ளது. இது ஒரு சிறிய எண்ணமாகவே இருக்கிறது, இன்னும் முழுமையான உரு பெறவில்லை. அவர் போராட்டத்தில் இறங்கியபோது நிகழ்ந்த பல சுவாரஸ்யமான சம்பவங்கள் நேரமின்மை கருதி இந்த ஆவணப்படத்தில் இடம்பெறவில்லை. அந்தச் சம்பவங்களைக் கேட்கும்போது இவ்வளவு தைரியமான பிழையற்ற மனிதனின் வாழ்வைத் திரைப்படமாக்கும் ஆசை நிச்சயம் இருக்கிறது.

அஸ்வகோஷ் ஆவணப்படத்தின் இசை

அடுத்து ஏதேனும் ஆவணப்படமோ குறும்படமோ எடுக்கும் திட்டங்கள் இருக்கின்றனவா?

வம்சி: அடுத்து ஓர் ஆவணப்படம் எடுக்கும் எண்ணம் உள்ளது, ஆனால் அஸ்வகோஷ் போல வாழ்க்கை வரலாறு அல்ல. ஓர் அரசியல் பிரச்சனையைப் பற்றி – விவசாயிகளின் தற்கொலைகளுக்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றிலிருந்து ஒரு காரணத்தை மட்டும் எடுத்து அதை மையமாக வைத்து ஆவணப்படம் எடுக்கும் ஆசை உள்ளது. இதற்கு நான் நிறையத் தெரிந்துகொள்ள வேண்டும். ஆவணப்படத்தில் உண்மையை மட்டுமே பேச முடியும். எந்தத் தகவலும் தவறாக இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் அதன் மதிப்பு குறைந்துபோகும். இதற்கு ஆழமான ஆராய்ச்சியும் பலரைச் சந்தித்துப் பேச வேண்டிய தேவையும் இருக்கிறது. இந்த ஆவணப்படம் கோரும் கால அவகாசமும் மிக அதிகமாக இருக்கிறது. அதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளேன். புகைப்படம் எடுப்பது, சிறிய காணொளிகள் தயாரிப்பது, போன்ற வேலைகளைத் தொடர்ந்து செய்கிறேன்.

தமிழ் எழுத்தாளர்கள் பற்றிய ஆவணப்படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த/பிடிக்காத அம்சம்?

வம்சி: பிடித்தவை பிடிக்கதவை என்று எதுவும் எனக்குத் தோன்றவில்லை. ஓர் ஆவணப்படமானது ஏதோவொன்றைக் கற்பித்துக்கொண்டே இருக்கிறது. அதனால் யாரோ ஒருவர் பயன்பெற்றுக்கொண்டே இருக்கிறார். ஆவணப்படம் ஒரு மனிதன் உருவாக்கியது என்பதைத் தாண்டி ஏதோவொரு விஷயத்தை நமக்குச் சொல்ல வருகிறது. ஆவணமாக்குதல் நாம் பார்க்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு வரும் உணர்வைத் தருகிறது. எல்லா ஆவணப்படங்களிலும் ஒரு கற்பித்தல் இருக்கிறது, புதிதாக ஒன்று தெரியவருகிறது. எல்லா ஆவணப்படங்களும் முக்கியம்.

உமா கதிர்: வணிகப்படங்களைப் போல பிடித்த பிடிக்காத அம்சங்களைப் பட்டியலிடுவது அபத்தமானது என்றே நினைக்கிறேன். ஏன் என்றால் இங்கே எழுத்தாளர்களை ஆவணப்படுத்தும் முயற்சி முற்றிலுமாக இல்லை. ஒரு காலகட்டத்தின் மொழியின் சாட்சியாக இருப்பவர்கள் அவர்கள். இன்றளவும் வாசகர் மத்தியில் பெரிதும் போற்றப்படும் ப.சிங்காரம் அவர்களின் நல்ல புகைப்படம் நம்மிடம் கிடையாது. இப்படி ஏராளமான எழுத்தாளர்களின் புகைப்படம்கூட இல்லை. நாம் தொழில்நுட்பங்கள் எளிமைப்படுத்தப்பட்ட காலத்தில் வாழ்கிறோம். வரும் அடுத்த தலைமுறைகளுக்கும், வரலாற்றின் சாட்சியாக இருக்கும் எழுத்தாளர்களுக்கும் ஆவணப்படம் என்பது அவசியம். ஒரே மாதிரியான காட்சிப்படுத்தலின் வழியாக, ஒரு சிறு கூட்டம் மட்டுமே காணும் வகையில் இல்லாது வெவ்வேறு யுக்திகளைக் கையாண்டு இன்னும் நிறைய ஆவணப்படங்கள் எடுக்கப்பட வேண்டும்.

அஸ்வகோஷ் இலக்கியத்திலிருந்து நேரடி அரசியலுக்குள் இறங்கிய முடிவைப் பற்றி இரு தரப்பு வாதங்கள் ஆவணப்படத்தில் முன்வைக்கப்பட்டன. அவரின் இம்முடிவு குறித்து உங்களின் நிலைப்பாடு என்ன?

உமா கதிர்: அவரே மேடையில் அதைப் பகிர்ந்திருக்கிறார். தேவை இருந்தது, அறிவை ஜனநாயகப்படுத்துவது எழுத்தாளனின் கடமை என உணர்ந்திருந்தார். அவர் நினைத்த அரசியல் என்பது முற்றிலும் வேறு என அவரது செயல்பாடுகளின் மூலம் நாம் அறிய முடியும். மக்களுக்கான தேவைகள், அவர்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு விஞ்ஞானம், மார்க்சியம், நாடகம், தமிழ்த் தேசியம், பின் நவீனத்துவம் எனத் தன் படைப்புத்தளத்திலிருந்து விலகிப் பயணித்தார். உதாரணத்திற்கு இன்றைய கூடங்குளம் அணு உலை பற்றி அதன் ஆரம்ப காலகட்டத்தில் புத்தகம் எழுதினார். அப்போதைய காலத்தில் அணு விஞ்ஞானம், அணு மின்சாரம் சம்பந்தமாகத் தமிழில் நூல்கள் எதுவும் எழுதப்பட்டிருக்கவில்லை. ஆனால் அதன் தேவை சமூகத்தின் முன்பு இருந்தது. அணு மின்சாரம் சம்பந்தமான நூல்களை ஆய்வு செய்து தமிழில் புத்தகம் எழுதினார். இப்படியாக அவரின் ஒவ்வொரு நூலிற்குப் பின்னும் ஒரு சமூகத் தேவை இருந்தது. இலக்கியத்தளத்தில் அவர் தொடர்ந்து இயங்காதது குறித்துப் பலர் ஆதங்கப்பட்டிருக்கிறார்கள். எதை எழுதுவது, இச்சமூகத்திற்கு முன் எதை வைப்பது என்பது படைப்பாளியின் உரிமை. நாம் அதை மதிக்க வேண்டும்.

அஸ்வகோஷ் ஆவணப்பட வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் இராஜேந்திர சோழனின் உரை

அவர் அரசியலுக்கு இறங்கிய பின்பான வாழ்க்கை ஆவணப்படத்தில் இடம்பெற்றது தற்செயலானது. படம் திட்டமிடலில் அது இல்லை. ஆவணப்படத்தில் அவரின் முழு வாழ்க்கையைப் பதிவு செய்வதுபோல ஸ்க்ரிப்ட் அமைத்துக்கொண்ட பிறகு அவரின் பலம், பலவீனம் இரண்டையுமே பதிவு செய்வது அவசியம் என்றே உணர்ந்தோம். இப்படியான கோணத்தில் படம் செல்ல வேண்டும் என வம்சி முடிவு செய்திருந்தான்.

அஸ்வகோஷின் படைப்புகள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளனவா? பிற மொழியில் வாசிப்பவர்கள் ஏன் அஸ்வகோஷை வாசிக்க வேண்டும்?

உமா கதிர்: ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறதா என்பது தெரியவில்லை. ஆனால் அவசியம் மொழிபெயர்க்கப்பட வேண்டிய எழுத்தாளர் என்பதில் சந்தேகமில்லை. இந்திய இலக்கியங்களில் உள்ள பல்வேறு மொழி ஆளுமைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறார்கள். குறிப்பாக வங்க எழுத்தாளர்கள், மலையாள எழுத்தாளர்கள். மொழிபெயர்ப்பு இல்லையென்றால் தாகூரும் பஷீரும் கங்காபாத்யாவும் மண்டோவும் நமக்குக் கிடைத்திருக்க மாட்டார்கள். இந்திய நிலப்பரப்பில் எங்கோ இருக்கும் அந்நிய மொழி வாசகர்களுக்குத் தமிழ் நிலப்பரப்பும் சென்று சேர வேண்டிய அவசியம் உள்ளது.

[குறிப்பு: அஸ்வகோஷின் படைப்புகள் எதுவும் முழுமையாக மொழிபெயர்க்கப்படவில்லை, அங்கொன்றும் இங்கொன்றுமாகவே நிகழ்ந்துள்ளன. திலிப் குமார் தொகுத்த The Tamil Story மொழிபெயர்ப்புத் தொகுப்பில் இவரது ‘சாவி’ சிறுகதை ஆங்கிலத்தில் The Key என்று வெளியாகியுள்ளது.]

அஸ்வகோஷ் போல சமகாலப் படைப்பாளிகளின் ஆவணப்படங்களை அவரவர் வாழும் காலத்திலேயே உருவாக்குவதன் அவசியம் என்னவென்று நினைக்கிறீர்கள்?

வம்சி: வின்சென்ட் வான்கா மிகப்பெரும் ஓவியர். உலகே கொண்டாடும் முக்கியமான ஓவியர். 36 வயதில் அவர் இறக்கும்போது ஒரு பைத்தியக்காரனாகவே அறியப்பட்டார். இங்கும் அங்கும் சுற்றித் திரிந்து ஏதோ வரையும் பைத்தியக்காரனாக அறியப்பட்டுக் கல்லறையில் புதைக்கப்பட்டார். கடைசிவரை வான்காவிற்குத் தெரியாது, தான் ஒரு மாபெரும் கலைஞராக உலகம் முழுதும் அறியப்படுவோம், எல்லோரும் நமது ஓவியங்களைப் பார்ப்பார்கள் என்று. அவரின் இறப்பிற்குப் பிறகு, அவரை இவ்வளவு கொண்டாடி, அவர் ஓவியங்களைப் பற்றிப் பேசி, அருங்காட்சியகங்களில் அவரின் ஓவியங்களை வைத்து என்ன பயன்? பயன் என்பதையெல்லாம்விட, ஐயோ தான் கொண்டாடப்படுவது வாங்காவிற்குத் தெரியாதே என்பது வருத்தமளிக்கிறது. பல கலைஞர்களுக்கு இதைப் போன்று நிகழ்ந்துள்ளது.

ஒரு கலைஞரை அவர் வாழும்போதே கொண்டாடுவதில் ஒரு நிறைவு இருக்கிறது. பல கலைஞர்கள் கலையில் நமது வாழ்க்கையை வீணடித்துவிட்டோமோ என்கிற கேள்வியுடன் இறந்துபோகிறார்கள். இதையெல்லாம் விட்டுக் குடும்பம் மீது கவனம் செலுத்தியிருந்தால் சந்தோஷம் இருந்திருக்குமோ? லௌகீக வாழ்வைத் துறந்து கலைப் படைப்புகள் உருவாக்கியதற்கு நம்மை அங்கீகரிக்கவே இல்லையே? அங்கீகாரத்தைத் தாண்டி அது எதற்கும் பயன்படவே இல்லையே என்கிற எண்ணத்துடனே பல எழுத்தாளர்கள் இறந்துபோகிறார்கள். வாழும் நாட்களில் அங்கீகாரம் கிடைக்கும்போது அதைக் கர்வத்துடன் எழுத்தாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள். இது மன நிறைவை அளிக்கும். நாம் எழுதிய ஏதோவொரு புத்தகம் உலகின் ஏதோவொரு மூலையில் இருக்கும் யாரோ ஒருவரின் வாழ்க்கையை மாற்றியிருக்கிறது — இந்த நிறைவு முக்கியம்.

கலைஞனைக் கொண்டாடவேண்டிய அவசியம் தமிழகத்தில் இருக்கிறது. நாம் வாழும் சமூதாயத்தில் நமக்குத் தேவையில்லாத, சம்பந்தமில்லாத, முற்றிலும் வேறுபட்ட மனிதர்களையே காலம் காலமாகக் கொண்டாடி வருகிறோம். நமது சமூகத்திற்கு முக்கியமான, அதற்குப் போராடும், கலைக்காகத் தன்னை அர்ப்பணிக்கும் கலைஞனை இந்தச் சமூகம் புறக்கணித்துக்கொண்டே இருக்கிறது. இந்தச் சூழலில் ஒரு கலைஞனை அவனது வாழ்நாளிலேயே கொண்டாடுவது அவசியம். இப்படிக் கொண்டாடுவது, இன்னும் நான்கு கதைகளையோ, பத்து புகைப்படங்களையோ, ஏழெட்டு ஓவியங்களையோ வரைய உந்துதலாக இருக்கும். யார் கொண்டாடுகிறார், அவருக்கு எவ்வளவு வயது என்பது முக்கியமல்ல. கலையின் மீதான உந்துதல் கடைசி காலம் வரை குறையாமல், மீண்டும் பிறந்த குழந்தை போல இன்னும் பல படைப்புகளை உருவாக்க ஊக்குவிக்கும்.

உமா கதிர்: இந்த ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா மேடையில் அஸ்வகோஷ் சொன்ன வரிகள்தான் நினைவுக்கு வருகிறது. தான் இன்னமும் வாசிக்கப்பட்டும் தொடர்ச்சியாக விவாதிக்கப்படுவதுமே கலைஞனுக்கு மகிழ்ச்சியளிக்கும் செயல். காலம் எனும் பெருவெள்ளத்தில் நாம் அடித்துச்செல்லப்பட்டு விட்டோம் என்று நினைத்துத் துயருரும் வேளையில் இந்த ஆவணப்படம் என்னை மீட்டுக்கொடுத்திருக்கிறது என்றார். இந்த ஆவணப்படத்தின் வெற்றியாகவே அவரின் சொற்களை எண்ணிக்கொள்கிறேன். இதைப்போல பிரபஞ்சன், மா.அரங்கநாதன், சுந்தர ராமசாமி, சி.சு செல்லப்பா என மறைந்த எழுத்தாளர்களுக்கெல்லாம் அவர்கள் உயிரோடு இருந்த காலத்தில் செய்யப்பட்டிருந்தால் எவ்வளவு மகிழ்வுக்குரியதாக இருந்திருக்கும். ஆவணப்படங்கள் இறந்தவர்களுக்கானது அல்ல. அவர்கள் வாழும்போதே கவுரவிக்கப்படவேண்டும் என்பதுதான் எல்லோரது விருப்பமும்.


மேலும் பார்க்க

இராஜேந்திர சோழன் தடம் நேர்காணல் – https://www.vikatan.com/arts/literature/interview-with-writer-rajendra-cholan-2

நன்றி: திருத்தங்கள் செய்யவும் நேர்காணலின் வடிவமைப்பை மெருகேற்றவும் உதவிய சுஜாவிற்கு.

You can read this interview in English here.

Did you like what you read? Support us as we explore film cultures from around the world; experience cinema in new ways with us. Let us keep The World of Apu free for all!

Become a Patron!