2018 சென்னை சர்வதேச குயர் திரைப்பட விழா – ஒரு பார்வை

சென்னை சர்வதேச குயர் திரைப்பட விழாவில் இருந்து பிரதீப் பாலுவின் குறிப்புரை.

4 min read

Read this article in English here.


வருடா வருடம் ஜூலை மாத இறுதியில் LGBTQ+ சமூக மக்கள் சார்ந்த பல உலக மற்றும் உள்ளூர்ப் படங்கள் சென்னை சர்வதேச Queer திரைப்பட விழாவில் (CIQFF) திரையிடப்பட்டு வருகின்றன. Orinam, Goethe-Institut, Nirangal, Chennai Queer Cafe (CQC), Saathii மற்றும் East-West Center for Counselling and Training ஆகிய அமைப்புகள் இந்தத் திரைப்பட விழாவை ஒருங்கிணைத்து நடத்துகின்றனர்.

பதினேழு நாடுகளிலிருந்து ஏறத்தாழ முப்பத்தியிரண்டு படங்கள் இவ்விழாவில் திரையிடப்பட்டன. அதிகக் கவனம் பெற்றிடாத உள்ளூர்க் கலைஞர்கள் மற்றும் ஊடகத்துறை மாணவர்கள் அப்படைப்புகளின் கர்த்தாக்கள். அடிமட்ட சமூக அமைப்புகள் சந்திக்கும் சிக்கல்களை, பொது வெளியில் காணக்கிடைக்காத யதார்த்தத்தை, இப்படங்கள் மிக எளிமையாக வெளிக்கொணர்கின்றன.

திரைமொழியில் Sensuality எனும் புலனுகர்வின்பத்தைப் பரிணமிக்கச் செய்யும் பணியை உலகளாவிய பாலியல் பன்மைத்துவ மக்களே மேற்கொண்டு வருகின்றனர். முகம், கண், உதடு, காது, மார்பகங்கள், கைவிரல்கள், இடுப்பு மற்றும் தொடையின் பின்புறங்கள் ஆகியவற்றைக்கொண்டே புலனுகர்வின்பத்தைச் சித்தரிக்க, இருபால் உறவை முன்னிறுத்தும் திரைமொழி உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புலனுகர்வின்பத்தை வெறும் பெண்ணுடல் பொருளாக்கத்தைக் கொண்டே வளர்த்தெடுக்கப்பட்டிருக்கும் கட்டுப்பெட்டித்தனமான திரைமொழியை, பாலியல் பன்மைத்துவத் திரைப்படங்கள் விமரிசையாக உடைத்து வருகின்றன. இந்த உலகளாவிய திரைப்பட நடைமுறைக்கு ஒத்திசையும் வகையில் இவ்விழாவில் திரையிடப்பட்ட படங்கள் விளங்கின.

Something About Alex என்ற நெதர்லன்ட்ஸ் நாட்டுக் குறும்படத்தை இவ்விடத்தில் நினைவுகூர வேண்டும். தான் ஓர் ஆண் என்று உணரும் பதின்பருவ பெண்ணொருத்தியின் கதை இது. ஆயினும் படத்தின் மையக் கதாப்பாத்திரத்தில் ஓர் ஆண் நடிகரை நடிக்கச் செய்து, எதனால் சமூகத்தில் சேர்க்கப்படாமல் ஒதுக்கப்படுகிறோம் என்ற வேதனையை அக்கதாப்பாத்திரம் உணரும் தருவாயில் அது திரையில் பெண்ணாக உருமாறுகிறது. மேலும், இந்தச் சுய-குழப்பத்தைக் கையாளும் இளைஞருடைய பெற்றோர்களின் கையறுநிலை படத்தின் மைய உள்ளடக்கங்களில் ஒன்று. உருவத்துக்கும் நடத்தைக்கும் இடையிலிருக்கும் வித்தியாசத்தை, தேர்ந்த சினிமா யுக்திகளுடன், தோலுரித்துக் காட்டியது இத்திரைப்படம். சுய-அடையாளம் என்ற மையத்துடன், அதன் உள்ளடுக்குகளாக, பிரதான கதாப்பாத்திரத்தின் அபாலியல் (Asexual) தன்மை – ஆண் நண்பரொருவர் முத்தமிட முயன்றபொழுது மையக் கதாப்பாத்திரம் அவ்விடத்திலிருந்து ஓடும் காட்சி – இப்படத்தில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்தது. (அபாலியலை திரையாக்கிய படைப்புகள் எண்ணிக்கையளவில் மிக மிகச் சொற்பம்.)

Taste of Love என்ற அமெரிக்கத் திரைப்படம் காமத்தையும் நாவின் ருசியையும் இழைத்து, ஒரு பெண்ணின் பல்வேறு காம அனுபவங்களை அவையொத்த ருசிகளை வைத்துக் காட்சிப்படுத்த முயன்றது. பசியைக் காமத்திற்கு உவமையாக்கி விடுகிறதா என்ற குழப்பதிற்கு வாய்ப்பளிக்காமல், தனிமனிதரின் சுய-ருசித் தேர்வை மையமாகக்கொண்டு இது படமாக்கப்பட்டுள்ளது. திரையெங்கும் பெண்ணின் பாலியல் தேர்வையொத்த ருசிமிகு பழங்களும், அவற்றின் வண்ணங்களும் நிறைந்திருந்தன. இதுவொரு காமம் சொட்டும் தனிநபர் சார் மீ எதார்த்தக் (surreal) குறும்படமாகும்.

இவ்வருடம் Goethe Institut மற்றும் Berlinale இணைந்து, பெர்லின் திரைப்பட விழாவில் இடம்பெற்ற சில படங்களை இவ்விழாவில் திரையிட வழங்கிய அனுமதி, விழா அனுபவத்தையே முழுமைப்படுத்திவிட்டது. பெர்லின் திரைப்பட விழாவின் உயரிய விருதான சிறந்த முழுநீளத் திரைப்படத்திற்கான போட்டிக்குப் பரிந்துரை செய்யப்பட்ட படமான Paths (பாதைகள்) CIQFFல் இடம்பெற்றது. ஆண் தம்பதிகள் இருவருக்குள் நிகழும் யதார்த்த உறவுமுறைச் சிக்கல்கள் மற்றும் அவர்களிடம் வளரும் குழந்தையின் உட்கதை என இப்படத்தின் ஒருபால் உறவு பல தளங்களில் விஸ்தீகரிக்கிறது. இந்த ஒருபால் உறவைப் பிரகடனப்படுத்த படக்குழுவினர் கையாளும் திரைமொழி எந்த இடத்திலும் கதாப்பாத்திரங்களின் முகங்களுக்கோ, ஆணுருப்புக்கோ க்ளோஸ்அப் வைக்கவேயில்லை. இருவரின் உடல்கள் நெருங்கும் பொழுது, கண்கள் கட்டுப்பாட்டில் இல்லாமல் அலைந்து திரிந்து கழுத்தில் வளரும் சிறு மயிர்களையும், கைச்சதைகளின் அடர்த்தியையும், மயிர்கூச்செறிந்த உடல் தோலையுமல்லவா கண்டு களிக்கும். இதையே இப்படமும் காட்சிப்படுத்தியுள்ளது.

இந்த நடைமுறையை இன்று பரவலாகப் பல ஐரோப்பியப் படங்களில் நாம் காணலாம். வெறும் முகங்களையும் உடல் துவாரங்களையும் காட்சிப்படுத்துவதுடன் நின்றுவிடாமல், உடலைக் கவர்ச்சியாகக் காட்டும் முறைகள் எவை எனப் பல ஐரோப்பியக் கலைஞர்கள் – குறிப்பாகப் பாலியல் பன்மைத்துவக் கருத்தியல் கொண்ட கலைஞர்கள் – தொடர்ந்து கண்டறிந்து, வெற்றிகரமாகச் செயல்படுத்தியும் வருகிறார்கள். அதன் பட்டவர்த்தனமான வெளிப்பாடாக இப்படத்தை நம்மால் அடையாளம் காண முடியும்.

அதே பெர்லின் திரைப்பட விழாவில் பங்கெடுத்த குறும்படம் சுவீடன் நாட்டைச் சேர்ந்த The Comet. பாலியல் ஒடுக்குமுறையுடன் இன, நிற ஒடுக்குமுறைகளையும் இணைத்து, சமகால உலகின் குடியேற்ற அரசியலை (immigrant politics) வெளிப்படையாக விமர்சிக்கிறது. இதை நிகழ்த்த இப்படம் கையாண்ட சினிமா யுக்தி, கேமராவைக் காட்சிச் சூழலின் ஓர் அங்கமாகப் பதிக்கும் யதார்த்தத் துன்பியல் சார்ந்ததாகும். அரசியல் மெய்யுணர்வு, நிகழ்காலத்திற்குச் சற்றே பழமையான இந்தத் திரை யுக்தியைக் கடந்து, பார்வையாளரைத் தாக்கும் அதிசயம் இப்படைப்பில் நிகழ்கிறது.

இவ்வாறு, பல்வேறு வகையான திரையுக்திகளையும் உள்ளடக்கங்களையும் கொண்ட முழுநீள/ஆவண/குறும்படங்கள் இவ்விழாவில் பங்குபெற்றன. விழாவின் குறிப்பிடத்தக்க இதர படங்கள் என May, Gender Troubles: The Butches (Butches – ஆண்தோற்றமுரும் பெண்கள் – சார்ந்த சொற்ப பிரிதிநிதிகளுள் இப்படம் முன்னிலை வகிக்கும் என்பதில் சந்தேகமே வேண்டாம்), Rebellious Essence, Ablution, Older Than What, My Gay Sister (பெர்லின் திரைப்பட விழாவில் சிறந்த குறும்பட விருதைத் தட்டிச் சென்ற படம்), Sunken Plum, The Cycle ஆகியவற்றைக் கூறலாம்.

இந்த உலகப் படங்களுடன் எட்டு தமிழ் மற்றும் இந்திய முழுநீள, ஆவண, குறும்படங்களும் விழாவில் இடம்பெற்றன. இந்தியப் படங்களை இதரமொழிப் படங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அவை படுபாதக நிலையிலேயே உள்ளன என்பது வெள்ளிடை. இதற்கு நிதி மற்றும் சினிமா யுக்திகளின் தட்டுப்பாடே காரணம் என்று அவர்கள் சுய பச்சாதாபம் அடைந்து கொள்ளலாம். உண்மை அதுவல்ல!

May என்றவொரு மலையாள மொழித் திரைப்படம் இங்குத் திரையிடப்பட்டது. மிகவும் குறைந்த செலவுடன், வெளியிடங்களை அதிகம் பயன்படுத்தாமல், பெரும்பாலும் இரவிலேயே நடைபெறும் வண்ணம் (பொதுமக்களின் ஈடுபாடு இல்லாத வகையில்) உருவாக்கப்பட்டிருந்தது. நிற்க!

இந்தியாவைப் பொறுத்தவரை LGBTQ+ சார்ந்த படைப்புகள் சமீப காலங்களில் அதீத உத்வேகத்துடன் வெளிவரத் துவங்கியுள்ளன. இந்தியர்களின் மனம் பரந்துவிரிந்து வருகிறது என்பதல்ல இதற்கு அர்த்தம். இந்திய மேல்வர்க்க இளைஞர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் LGBTQ+, சரியாகச் சொல்ல வேண்டுமென்றால் வெறும் Gay, Lesbian, கருத்தாக்கங்கள் திரைப்படச் சந்தைக்குப் புதியதாய் இருக்கும் என்று கணிக்கின்றனர். முதன் முதலில் இந்திய மண்ணில் வந்திறங்கிய பிரஞ்சு மொழி கருப்பு வெள்ளை பேசாபடத்தைக் கண்ட இந்தியக் கலைஞர்கள், அதே போல இந்தியப் படமொன்றை உருவாக்கித் திரைப்படச் சந்தையில் விற்றதைப் போல, cow boy படங்களைப் பார்த்து ஜெயசங்கர் படம் உருவானதைப் போல, சமீபத்தில் அமெரிக்க விண்வெளிப் படத்தையொத்த தமிழ்ப் படமொன்று உருவானதைப் போல, LGBTQ+ கருத்துக்களை இந்தியாவில் முதன்முதலில் பதித்தது தாமே என்ற இடத்தை அடையவே பலர் மும்முரமாய் இருப்பதாகத் தோன்றுகிறது.

இவ்விழாவில் பங்கெடுத்த 90% இந்திய மற்றும் தமிழ்ப் படங்கள் நேரடியான கே லெஸ்பியன் ஜோடிகளின் வாழ்வியலை இரண்டாம் பட்சமாகவே அலசுகின்றன. அவற்றின் முதன்மைக் குறிக்கோள் பரப்புரை என்ற பெயரில் அறிவுரை வழங்குதலே! சரி போகட்டும்! இவர்கள் படத்தில் LGBTQ+ தம்பதிகளைக் காண்பிக்கும் விதத்தைப் பார்த்தால், கட்டுரையின் முந்தையப் பகுதியில் கூறியதைப் போல, புலனுகர்வின்பத்தைப் பதிவு செய்ய இவர்கள் கதாப்பாத்திரத்தின் முகம், இடுப்பு, மார் ஆகிய, இருபால் ஒத்தத் திரைமொழியையே ஒருபால் உறவுக்கும் கச்சிதமாகத் தகவமைத்துக் கொள்கின்றனர் (விழாவில் பங்கெடுத்த Cover Story, Anthadhi, Natural, Amar, Prem ஆகிய படங்களை இதற்கு உதாரணமெனக் கூறலாம்). ஐரோப்பாவைப் போல, தென்னமெரிக்காவைப் போல, இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் LGBTQ+ சார்ந்த பிரத்யேகத் திரைமொழி என்று எதுவுமில்லை. ஆகையால் படக்கதையில், பெயருக்கென மாற்றுப் பாலியலைப் புனைந்துகொண்டு, இந்தியாவின் இருபால் உறவை முன்வைக்கும் அதே திரைமொழியை இதற்குள் தகவமைப்பதையே இந்திய மற்றும் தமிழ்ப் படங்கள் நிகழ்த்துகின்றன.

கதைக்கும் கதை மாந்தர்களுக்கும் உண்மையாக இருந்த ஒரே இந்தியப் படம் முன்பு குறிப்பிட்ட May என்ற மலையாளக் குறும்படம். இது நேரடியான ஒருபால் உறவைச் சித்தரிக்கவில்லை. பல ஆண்டுகளுக்கு முன்பு உறவிலிருந்த இரு ஆண் காதலர்கள் (நண்பர்கள்!) தற்பொழுது சந்திக்கும் பொழுது அவர்களின் மனதுள் உதிக்கும் மன எழுச்சிகளே இந்தக் குறும்படம். சந்திக்க வந்தவர் இறுதியில் தனது ஆண் காதலருக்கு (நண்பர்!) ஓர் அன்பளிப்பை வழங்கிவிட்டுச் சென்றுவிடுகிறார். அவ்வளவுதான் திரைப்படம். எந்தவிதச் செலவுமிகு கேமராவோ, பொதுமக்கள் பங்கீடோ இல்லாமல் இப்படம் மேன்மை மிகுதியுடன் ஒருபால் உறவைச் சித்தரித்தது. திரையிடப்பட்ட பிறகு இதுவும் பார்வையாளர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.

உள்ளூர்ப் படைப்புகளை இவ்வாறு ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு செய்தல் அதன் கலைஞர்களை ஊக்குவிப்பதற்காகத்தான். அந்த அடிப்படையில் இத்தகைய படைப்புகள் இவ்விழாவில் பங்கெடுத்து, அதே விழாவில் திரையிடப்படும் இதர படைப்புகளைக் கணக்கிற்கொண்டு எதிர்வரும் வருடம் மேலும் மேன்மையுறும் என்ற நம்பிக்கையில் இருப்பதே தீர்வு. இந்தப் பாதையில் விமர்சனங்களற்று இந்திய மற்றும் தமிழ் LGBTQ+ படங்களை ஏற்பது மிகவும் அபாயகரமானது.

ஆக மொத்தத்தில் விழாவில் இவ்வருடம் திரையிடப்பட்ட படங்கள் பார்வையாளர்களுக்கு முழுமை தரும் விதமாக அமைந்தது என்றே கூறவேண்டும். அரங்கம் நிறைந்ததால் பலர் இருக்கைகளற்றுத் தரையில் அமர்ந்து படங்களைப் பார்த்தனர். திரைப்படங்களுடன், முதல் நாள் கல்கி சுப்ரமணியம் அவர்களின் கவிதை வாசிப்பும், இரண்டாம் நாள் Intersections and Solidarities என்ற தலைப்பில் சமூக ஆர்வலர்கள் பலர் பங்குகொண்ட கலந்துரையாடலும், இறுதி நாள் அ.ரேவதி அவர்கள் நடித்த வெள்ளை மொழி நாடகமும் அரங்கேறியது.

LGBTQ+ சமூகம் சார்ந்து பணி புரியும் பல சமூக ஆர்வலர்கள் இந்த உரையாடலில் பங்குகொண்டு, இந்தியாவின் இதர மாநிலங்களில் பணி புரியும் LGBTQ+ சமூக மக்கள் பேசத் தயங்கும் பாலியல் ஒடுக்குமுறை மற்றும் தலித் ஒடுக்குமுறையின் இணைவை உரையாடல் பொருளாக்கி விவாதித்தனர். இது இந்தியச் சமூகத்தின் தேவை. உரையாடல் முடிந்த மறுகணம், ஒரு நபர், “எதற்காக அனைத்தையும் அரசியல் ஆக்குகிறீர்கள்?! எதற்காக sexuality உடன் தலித் அரசியலைக் கலக்குகிறீர்கள்?” என்றெல்லாம் கூறித் தனது கோபத்தை வெளிப்படுத்தினார். இது சிறு சலசலப்பை ஏற்படுத்தினாலும், பாலியல் சித்தாந்தங்களைத் தனிநபர் என்ற அளவுகோல்களில் நிறுத்திக்கொள்ளாமல், அவற்றைச் சமூகப் படிநிலைகளுக்கு முன்னகர்த்தல் வேண்டும் என்று குழுமியிருந்த மக்களுக்குப் புரிந்ததாலோ என்னவோ, இந்த எதிர்ப்புக் குரலைச் சிரிப்புச் சத்தங்களுடன் ஏற்றுக் கடந்துவிட்டனர்.

எதிர்வரும் ஆண்டும் இதே போல Goethe Institut, Berlinale ஒருங்கிணைப்புடன் சமகால உலகப் படைப்புகளும், உலகின் பல்வேறு சினிமா மாணவர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் படைப்புகளும் இவ்விழாவில் பங்கு கொள்ளும் என்று தீர்க்கமாக நம்புகிறேன். பலப் புதிய கலைஞர்களின் பங்கேற்புடன் அடுத்த வருடம் வரவிருக்கும் இந்நிகழ்வை எதிர்நோக்கிக் காத்திருப்போம்!


எழுத்தாளரைப் பற்றி

பிரதீப் பாலு சென்னையில் வசிப்பவர். இயந்திரவியல் பொறியாளராகப் பணிபுரிந்த இவர் எழுத்துத் துறையில் பயணிக்கும் நோக்கத்தில் வேலையைத் துறந்தார். புனைவுகள் எழுதுவதில் விருப்பம் கொண்டுள்ள இவருக்கு சினிமா மற்றும் சமூகவியல் துறைகளிலும் ஈடுபாடு உண்டு.

Did you like what you read? Support us as we explore film cultures from around the world; experience cinema in new ways with us. Let us keep The World of Apu free for all!

Become a Patron!