மனிதர்களின் நகரம்

பாலா சத்யஜித் ரேயின் படங்களில் கண்ட கொல்கத்தாவிற்கு சென்று வந்த அனுபவத்தைப் பற்றியும், அவரின் படங்கள் நமக்கு கொடுத்த கொல்கத்தா அனுபவத்தை பற்றியும் எழுதியுள்ளார்.

7 min read

Read this article in English here.


நள்ளிரவு ஒரு மணிக்கு கொல்கத்தாவை அடைவது அத்தனை உசிதமல்லவென்பது எனக்கு அப்பொழுது தெரிந்திருக்கவில்லை. நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் விமான நிலையத்திலிருந்து டாக்ஸி முன்பதிவு செய்து வெளியே வர, வரிசையாக நின்றுகொண்டிருந்தன அந்நகரின் பிரதான மஞ்சள் நிற டாக்ஸிகள். எனக்கான வண்டிக்குள் திணித்துக் கொண்டவாறே, ஹோட்டல் பெயரையும் அது இருக்கும் தெருப் பெயரையும் சொன்னேன். வாயில் எதையோ மென்று கொண்டிருந்தவாறே, என்னைத் திரும்பிப் பார்க்காமல் “கஹாங்?” என்றார்.

டிஜிட்டல் இந்தியாவில் எல்லா டாக்ஸி ஓட்டுநர்களிடமும் கூகுள் மேப்ஸ் இருக்குமென நம்பியது என் அறியாமையாக இருக்கக் கூடும். நகரங்களில் ஓடுகிற ஒரு பழைய அம்பாசிடர் காருக்கான பிரத்யேக முடை நாற்றம், திறந்திருந்த கார் கண்ணாடிகளைப் பொருட்படுத்தாமல் அங்கேயே நிலைகுத்தி அமர்ந்திருந்தது. புது சிம் கார்டு கிடைக்க மூன்று நாட்களாகும் என்பதால் நானும் அப்போது அடிஜிட்டல் இந்தியனாகத் (undigital Indian[1]) தானிருந்தேன். கிளம்பும் முன் சமயோஜிதமாகச் சேகரித்து வைத்திருந்த ஹோட்டல் வரைபடத்தின் ஸ்க்ரீன்ஷாட்டைப் பார்த்து,

“தாதா, கொல்கத்தா யூனிவர்சிட்டி கே பாஸ் மே” என்றேன்.

அவர் வாயிலிருக்கும் வஸ்துக்குள் சிக்கி “அச்சா” என்ற சொல் பின்னோக்கி வந்தது.

ஜன அரண்யா” (Jana Aranya, 1976) வின் முதல் காட்சி கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் ஒரு தேர்வறையில் தொடங்குகிறது. சிறு தாளொன்றினை வைத்து மறைத்து மறைத்து எழுதுபவனைக் காண்கிறோம். முன்னிருக்கையில், புத்தகத்தை மடியில் வைத்து எழுதுபவனைக் காட்டும் போது நமக்கும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. சிறிது சிறிதாக விரிவடைந்து, கண்காணிப்பாளரின் பார்வையில் மொத்த அறையும் தெரியும் போது, அது தேர்வறைக்கான எந்த ஒழுங்குமின்றி ஒரு சந்தையைப் போலக் காட்சியளிக்கிறது. விடைத்தாள்களும், துண்டுச்சீட்டுகளும் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. வெளியிலிருந்து ஆட்கள் வந்து புத்தகங்களைத் தருகிறார்கள். கண்காணிப்பாளர் எதுவுமே செய்யவியலாமல் வெறும் பார்வையாளராகவே அமர்ந்திருக்கிறார், வரலாற்றின் எத்தனையோ அரசுகளை, ஆட்சியாளர்களைப் போல. தற்செயலாக, அங்கு நடப்பதும் வரலாற்றுத் தேர்வே! முதல் காட்சியில் ஒளித்து ஒளித்து எழுதிய இரண்டு பேர் நினைவுக்கு வருகிறார்கள். அவர்கள் அப்படிச் செய்வதற்கானத் தேவையே அங்கில்லை. ஆனாலும், அஞ்சுவது போல ஒரு பாவனை தேவையாயிருக்கிறது!

அத்தனை களேபரத்திலும், சோம்நாத் நேர்மையாக எழுதுகிறான்.

ஆனாலும், (திருத்துபவரிடம் கண்ணாடி இல்லாததால்!) மிகக் குறைவான மதிப்பெண்களே கிடைக்கின்றன. பல மாதங்கள் வேலை தேடிக்கிடைக்காத நிலையில், யதேச்சையாக அமைகிற ஓர் இடைத்தரகர் வேலையை எடுத்துக் கொள்கிறான். நாள் முழுக்க அலைய வேண்டியிருந்தாலும் அந்நகரம் அவனுக்கான வாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கிறது, ஆனால் அது விரும்பும் திசையில்.

ஓர் ஒப்பந்தத்திற்காக சபல புத்தியுள்ள அதிகாரி ஒருவருக்கு விலைமகளை ஏற்பாடு செய்ய வேண்டிய தேவை வரும் போது முதலில் தீவிரமாக மறுக்கிறான். பின்பு மனம்மாறுபவன், ஓரிரவில் அதிகாரிக்காகப் பெண்களைத் தேடி அலைகிறான் – வேலை தேடி அலைந்ததைப் போலவே! இறுதியில் கிடைத்துவிடுகிற பெண்ணை, டாக்ஸியில் ஏறும் பொழுது தான் கவனிக்கிறான் – அவள் அவனுடைய நண்பனின் தங்கை. அதிர்ச்சியில் சிறிது நேரம் அமைதியாக வருபவன், அவளிடம் சொல்கிறான்,

“பணத்துக்காகவா? நாம் ஹோட்டலுக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை.”

“உன் கிளையண்ட்?”

“அது என் கவலை. காரை நிறுத்தச் சொல்கிறேன், நாம் அங்கு செல்லப் போவதில்லை.”

காருக்குள் இருவருக்கும் நிகழ்கிற உரையாடலைக் காட்டிலும், அவர்களது உடல் மொழி மட்டுமே அவர்களை அறிந்து கொள்ளப் போதுமானதாயிருக்கிறது. அவள் ஒரே நேரத்தில் வெறுப்புடனும், இறுக்கமாகவும், இயல்பாகவும் இருக்கிறாள். முதலில் அழுகிறான். அவளை வீட்டுக்குப் போகச் சொல்கிறான். ஆனாலும், அவன் போக வேண்டாமென வற்புறுத்துவது ஏதோவொரு பாவனையாகவே தோன்றுகிறது.

இறுதியாக, ஹோட்டலுக்குச் செல்கிறார்கள். அவனுக்கு ஆர்டர் கிடைக்கிறது. இந்நகரில் அவனுக்கான இடம் நிலைக்கிறது, அவனது அறமதிப்பீடுகளின் வீழ்ச்சியுடன்.

வண்டியை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்க்காமலே, “வந்து விட்டது” என்றார் ஓட்டுனர்.

வெளியே தலையை நீட்டி, சாலையின் பெயரைப் பார்க்க முயன்றேன். நள்ளிரவின் அமைதி எங்கும் படுத்திருந்தது. அருகில் ஓர் பல்கலைக்கழகம் இருப்பதற்கான எவ்வித அறிகுறிகளும் தெரியவில்லை.

“சூர்ய சென் தெரு அருகில் தான் இருக்க வேண்டும்” என்றேன்.

“எங்கே?” என்றார்.

“யாரிடமாவது கேட்கலாம். எனக்குத் தெரியாது” என்றேன்.

“எனக்கும் தெரியாது. இறங்கு”

இப்படியானதொரு பதிலை நான் எதிர்பார்த்திருக்கவில்லை. எனக்குத் தெரிந்த தூர்தர்ஷன் ஹிந்தியில் அவரிடம் பேச்சுவார்த்தை நிகழ்த்த முயல, என் சொல்லகராதியில் இல்லாத வசைச்சொற்கள் வந்துவிழுந்தன. கொல்கத்தாவில் நான் சந்தித்த முதல் மனிதரின் முகத்தைக் கடைசி வரைப் பார்க்கவேயில்லை என்பது நினைவுக்கு வந்தபோது, என்னை இறக்கி விட்டுவிட்டுக் கிளம்பிய வண்டி தூரத்தில் மறைந்திருந்தது. நான்கு சாலைகள் சந்திக்கிற அவ்விடத்தில் என்னைத் தவிர யாருமே தென்படவில்லை. விமானத்தின் குளிரைத் தாங்கப் அணிந்திருந்த இரண்டடுக்கு மேலாடை, அந்த நேரத்திலும் அங்கு நிலவிய புழுக்கத்தை மேலும் பூதாகரமாக்கியிருந்தது. ஆங்காங்கே தெருவிளக்குகள் தென்பட்டாலும், நிலத்தைத் தொடுவதற்கு வெளிச்சத்திற்கு ஏதோ தயக்கங்கள் இருக்கும் போலும். என் காலுக்கடியில் தென்பட்ட டிராம் தடங்கள் “கொண்டாட்டங்களின் நகரம் உங்களை அன்புடன் வரவேற்கிறது!” என பெங்காலியில் கூவியபடியே எங்கேயோ சென்று கொண்டிருந்தன, அதே நிதானத்துடன்.

இந்நகருக்கு முதன்முறையாயினும், கொல்கத்தாவின் சாலைகள் வெகுபரிச்சயமாகத் தோன்றின. இத்தொடர்புக்கு ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கக்கூடும் – சத்யஜித் ரே! ரே பிறந்து வளர்ந்தது அத்தனையும் இந்த பிரிட்டிஷ் இந்தியாவின் முதல் தலைநகரத்தில் தான். அதனாலோ என்னவோ, எனக்கு அவருடைய புகழ்பெற்ற “பதேர் பாஞ்சாலி” ஐக் காட்டிலும், கொல்கத்தாவை மையமாகக் கொண்ட படங்கள் (Calcutta Trilogy) மிக நெருக்கமானதாகத் தெரிகிறது.

சுதந்திர இந்தியாவின் மீதான நம்பிக்கைகள் சீர்குலையத் தொடங்கி, வறுமையும் வேலையில்லா திண்டாட்டமும் உச்சத்திலிருந்த எழுபதுகளில் தான் ரே “ப்ரதித்வந்தி” (Pratidwandi, 1970) ஐத் தொடங்கினார். தந்தையின் மரணத்தால், மருத்துவப் படிப்பை பாதியில் கைவிட்டு வேலை தேடும் சித்தார்த்தா தான் அவரது நாயகன். வேலையில்லாதால் நாள் முழுக்க வெவ்வேறு இடங்களில் பொழுதைக் கழிக்கிறான். அக்காலகட்டத்தில் வலுப்பெறத் தொடங்கிய நக்ஸலைட் இயக்கத்தில் சேருகிற தம்பியிடம் அவன் கனிவாக இருக்கிறான். பெண்களாக இருப்பதாலேயே அவர்களுக்கு வேலை கிடைத்து விடுவதாகச் சொல்லும் அவன், அடுத்த காட்சியில் வேலைக்குச் செல்கிற அவனது தங்கைக்கு ஆதரவாகப் பேசுகிறான். கொல்கத்தாவின் என்றும் எஞ்சியிருக்கிற ஹெடோனிசத்திற்கும் (படத்தில் ஹிப்பிகள் கூட இரண்டு முக்கிய தருணங்களில் காட்டப்படுகிறார்கள்), வளர்ந்து வருகிற இலட்சியவாதத்திற்கும், நடைமுறைவாதத்திற்கும் இடையில் சிக்கித் தவிக்கிறானோ என அவனுடன் சேர்ந்து நமக்கும் குழப்பமாக இருக்கிறது. ஊசலாடும் மனம் கொண்ட காரணத்தால் சித்தார்த்தாதான் ஒரு திரைப்படக் கலைஞனாகத் தனக்கு மிகவும் சுவாரசியமூட்டும் கதாபாத்திரம் என்று குறிப்பிடும் சத்யஜித் ரே, மனதிற்குள் பல சந்தேகங்கள் எழுப்பிக்கொள்ளும் ஒரு மனிதனாக, தனக்குள் அகவுரையாடல்களை நிகழ்த்திக் கொள்ளும் சித்தார்த்தாவே அவருக்கு அதிகம் ஆர்வமூட்டும் கதாபாத்திரம் என்றும் குறிப்பிடுகிறார்.

“As a filmmaker, however, I was more interested in the elder brother because he is the vacillating character. As a psychological entity, as a human being with doubts, he is a more interesting character to me.” – Satyajit Ray

இறுதியில் அவன் ஒரு நிலைப்பாட்டை எடுக்கும் கடைசி நேர்காணல் காட்சி அற்புதமானது. மிகக் குறைவான பணியிடங்களுக்குப், பலர் அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் அமர்வதற்கு அங்கு போதுமான இருக்கைகள் இல்லை. மின்விசிறியும் வேலை செய்யவில்லை. கொல்கத்தாவின் தாங்கவியலாத வழக்கமான வெப்பமும், புழுக்கமும் அவர்களுடன் சேர்ந்து அங்குக் காத்திருக்கிறது. வறட்சியில் ஒருவன் மயக்கமுறுகிறான், மற்ற அனைவருமே அரை மயக்க நிலையில் தானிருக்கிறார்கள். தேர்வு நடத்துபவர்கள் மதிய உணவுக்காகக் கிளம்பும் போது, சீற்றமுற்று சித்தார்த்தா அவ்வறையைச் சிதைக்கிறான். கொல்கத்தாவுக்கு வெளியிலுள்ள ஒரு வேலையை முன்பு ஒப்புக் கொள்ளத் தயங்கியவன், கடைசியில் வெளியேறுகிறான். அத்தனை காலமும் அவனுடைய மனதில் கேட்டுக்கொண்டேயிருந்த ஒரு பறவையின் கூவல் இறுதியில் அவ்வூரில் நிஜமாகவே அவனுக்குக் கேட்கிறது.

நமக்குள் ஒலித்துக் கொண்டிருக்கிற அழைப்பை உணர்வதற்கு (listen to the inner calling), ஏனோ நமக்கு ஒரு தருணம் தேவையாயிருக்கிறது. ஹாருகி முராகமி (Haruki Murakami) அவருடைய இருபத்தொன்பது வயதில் ஒரு நாள், பேஸ்பால் பார்க்கச் செல்கிறார். பந்து அடிக்கப்பட்டு, கைத்தட்டல் மைதானத்தைச் சூழும் பொழுது அவருக்குத் திடீரெனத் தோன்றுகிறது “தன்னால் ஒரு நாவல் எழுத முடியுமென.” அன்னை தெரசா டார்ஜிலிங்கிலிருந்து கொல்கத்தாவுக்கு இரயிலில் திரும்பிக் கொண்டிருக்கும் போது அவருக்கான அழைப்பைக் (அவர் அதை “call within a call” என்கிறார்) கேட்கிறார். அதன் பிறகு, தலைமையாசிரியராக இருந்த கான்வென்ட்டிலிருந்து வெளியேறி வறியவர்களுக்கான “Missionaries of Charity” ஆரம்பித்து அவர்களுடனேயே வாழத் தொடங்குகிறார். பறவையின் ஒலி என்பதை சித்தார்த்தாவின் நகரத்தை விட்டு வெளியேறுவதற்கான அழைப்பாகத் தான் புரிந்து கொள்ள முடிகிறது. தனக்கு மிக விருப்பமான ஒன்றைத் துறந்து செல்வது ஆன்மீகப் பயணத்திலொரு முக்கியக் கட்டம். இருபத்தைந்து நூற்றாண்டுகள் முன்பு, அரண்மனையையும், குடும்பத்தையும் துறந்த அந்த சித்தார்த்தா போலவே இவனும் கொல்கத்தாவைத் துறக்கிறான். அவன் வெளியேறுவதற்கு அந்நகரே அவனுக்குத் துணையாகியிருக்கிறது!

அந்நள்ளிரவில் நான் தடுமாறி நின்றிந்தபோது, வேறொரு திசையில் வந்தவொரு டாக்சியை நிறுத்தி, போக வேண்டிய தெருப் பெயரையும் சொன்னேன்.

“இங்கிருக்கும் இடத்திற்கு நடந்து போக மாட்டாயா?” என்ற தோரணையில் பார்த்து விட்டு வழி சொன்னார்.

அச்சாலையில் நடக்கத்தொடங்கும் போது தான் தெரிந்தது, இதுகாறும் நான் அவ்விடத்தில் தனித்தில்லை என்பது. மூடியிருந்த கடைகளின் வாசல்களிலும், சாலையின் விளிம்பிலும் மனிதர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள். ஓர் அந்நியனின் பிரவேசம் அவர்களிடத்தில் எச்சிறு சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்பது வியப்பாயிருந்தது. அதுவரையிருந்த ஒருவித அச்சம் விலகி, சட்டென நிம்மதி எனக்குள் படர்ந்தது. நகரம் என்பது மனிதர்கள் தவிர்த்து வேறென்ன?

நான் பார்த்த முதல் ரேயின் படமும், கொல்கத்தா குறித்த சிறந்தவொன்றாகக் கருதுவதும் “மகாநகர்” (Mahanagar, 1963) தான். குடும்பச் சூழல் காரணமாக, அரத்தி வேலைக்குச் செல்லத் தொடங்குகிறாள், அதுவும் அக்காலத்தில் பெண்கள் செல்லத்தயங்குகிற விற்பனையாளர் பணிக்கு. அவள் வேலை நிலைபெறத் தொடங்கும் தருணத்தில், அலுவலகத்தில் தன்னுடைய தோழிக்கு அநீதி நிகழ்த்தபடுவதை அறிந்து, அவளுக்காக நியாயம் கேட்கிறாள். அரத்தியின் வேலை பறிபோகிறது. இறுதிக்காட்சியில், இருவருக்கும் வேலையில்லையென்றாலும் அரத்தியும், அவளது கணவனும் நம்பிக்கையுடன் அம்மகாநகரின் சாலையில் நடக்கத் தொடங்குகிறார்கள். சித்தார்த்தா போல வெளியேறாமல், சோம்நாத் போல அறத்தை இழக்காமல், அவள் வாழ்வதற்கான வாய்ப்பையும் அந்நகரம் அவளுக்கு வழங்குகிறது.

நினைவு கூர்ந்தால், மகாநகரில் கொல்கத்தாவின் நிலத்தொகுதி அரிதாகவே வருகிறது. எந்தப் படத்திலும் ரே கொல்கத்தாவை ஒரு கவர்ச்சிப்பொருளாகப் பயன்படுத்தியதில்லை. அவருடைய கதாபாத்திரங்கள் அந்நகரில் வாழ்கிறார்கள், அவ்வளவே. சத்யஜித் ரேயின் மனிதர்கள் கொல்கத்தாவில் வசித்தாலும், அவர்களது வாழ்வும், மனங்களும், குழப்பங்களும், அனைத்து இடங்களுக்கும் பொதுவானவை. ஆனாலும், அந்நகரின் அத்தனை கூறுகளும் அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ அவர்களுக்குள் நிறைந்திருக்கிறது. அந்நகரில் வாழத் தொடங்கும் மனிதர்கள் அத்தனை பேரும், நகரத்தின் ஆன்மாவில் மெல்ல மெல்ல ஊடுருவி விடுகிறார்கள். நகரங்கள் மனிதர்களின் கதைகளையும், மனிதர்கள் நகரங்களின் கதைகளையும் களைப்பின்றி மாற்றி மாற்றி எழுதிக் கொண்டே இருப்பதாக தோன்றுகிறது.

ஓவியம் – திவ்யா மோகன்

கொல்கத்தாவின் தனித்துவங்கள் என்னவென யோசித்துப் பார்க்கிறேன். அதன் அகன்ற சாலைகள், மஞ்சள் டாக்ஸிகள், ஆங்கில பாணி கட்டமைப்பு, இன்னமும் ஓடும் ட்ராம்கள், கை ரிக்ஷாக்கள், குறுகிய தெருக்கள், எங்குமிருக்கும் காளிச் சிற்பங்கள், இற்றுப் போய் கருமை படிந்திருக்கும் கட்டிடங்கள், துர்கா பூஜை, இனிப்பில் ஊறிய தின்பண்டங்கள், நான்கு ரூபாய்க்குக் கிடைக்கும் மண்குடுவைத் தேநீர்கள், காலேஜ் ஸ்ட்ரீட் எங்கும் விரவியிருக்கிற புத்தகங்கள், எட்டு பேரை ஏற்றிச் செல்லும் ஆட்டோ, ஹூக்ளி பாலம், நகரின் மையத்திலிருக்கிற பூங்காக்கள், ஸால்தா மார்க்கெட், ஹௌரா ரயில் நிலையம் என எல்லாவற்றையும் தாண்டி ஒரு காட்சி நினைவுக்கு வருகிறது.

நான் கொல்கத்தாவிலிருந்த நாட்களில், தினமும் காலை ஆறுமணிக்கு ஹோட்டல் அறையை விட்டுக் கிளம்ப வேண்டியிருந்தது. இரண்டு சைக்கிள்கள் மட்டுமே செல்லும் அகலமுள்ள அத்தெரு அந்நேரத்தில் மட்டுமே அமைதியாக இருக்கும். தெருக்கடைசியில், காலையில் மட்டுமே பிரத்யேகமாக இயங்கும் சாலையையே வாசலாகக் கொண்ட தேநீர்க் கடையொன்றின் வாசலில்(!), நான்கைந்து பேர் டீயும் ரொட்டியுமாக நின்று கொண்டிருப்பார்கள். சதைகள் இறுகிய அவர்களது வெற்றுடம்பைக் காணும் போது, இக்காலையில் அவர்களுக்காகக் காத்திருக்கிற உடல் உழைப்பு இத்தேநீரைச் சீக்கிரமே உறிஞ்சிக் கொள்ளுமெனத் தோன்றும். அத்தெரு சென்று சேரும், மூன்று சைக்கிள்கள் செல்லக்கூடிய சற்றுப் பெரிய தெருவின் முகப்பில், வருடா வருடம் வருகிற விருந்தாளியாக விநாயகர் தற்காலிகமாக அமர்ந்திருந்தார். நானிருந்த காலேஜ் ஸ்ட்ரீட்டிலிருந்து பௌபசார் வழியாக ஏஜேஸி போஸ் சாலையை அடைவது ஓரு நீண்ட நாற்பத்தைந்து நிமிடப் பயணம். இப்படியே, சிறிதும் பெரிதுமான பற்பலத் தெருக்களைத் தாண்டி, தேநீர்க் கடைகளைத் தாண்டி, முந்தைய இரவு மழை கொண்டுவந்து சேர்த்திருக்கிற சேற்றைத் தாண்டி, தண்ணீர் எடுத்துச் செல்கிற பெண்களைத் தாண்டி, தெருவோரமிருக்கும் மனிதக் கழிவுகளைத் தாண்டி, பொதுக் கழிவறைகளின் வாயிலில் இருக்கிற வரிசையைத் தாண்டி, அக்காலையின் அமைதியை அவமதிக்கிற மார்க்கெட்டைத் தாண்டி, எங்கெங்கிருந்தோ அங்கு வந்து சேரும் சரக்குகளைத் தாண்டி, தெருவில் உறங்கிக் கொண்டிருக்கிற மனிதர்களைத் தாண்டிச் செல்லும் ஒரு காலையில் தான் அக்காட்சியைக் கண்டேன்.

டிராம்களும், பேருந்துகளும் சென்று வருகிற ஒரு பெரிய சாலையின் ஓரத்தில் ஒரு குடும்பம் படுத்திருந்தது. மொத்தமாக பத்து பேரிருந்த அவ்விடத்தில், பலர் உறங்கிக் கொண்டிருந்தனர். நடுத்தர வயதிருக்கும் ஒரு பெண் மட்டும் அமர்ந்திருந்தார். அவருக்கருகில், சாலைக்கும் தெருவுக்குமானத் தடுப்புக் கம்பியில் சாய்ந்தபடி வெள்ளை நிறச் சீருடையும், அதற்கு மேல் ஸ்வெட்டரும் அணிந்திருந்த ஒரு சிறுமி நின்று கொண்டிருந்தாள். அவளுக்கு, பத்து வயதிற்குள் தானிருக்க வேண்டுமெனத் தோன்றியது. தூக்கக் கலக்கமாகத் தெரிந்தாலும், அவளது முகம் வெளிச்சமில்லா அக்காலையிலும் பளிச்சென்றிருந்தது. அவள் எங்குக் குளித்து எப்படிக் கிளம்பியிருப்பாளென நினைத்துக் கொண்டேன். அமர்ந்திருந்த பெண் அச்சிறுமியின் ஷூவைச் சரிசெய்தபடியே அவளிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார். இன்னும் சில நிமிடங்களில் அச்சிறுமி சாலையை அடையும் போது, அவள் சற்று நேரம் முன்பு அதே சாலையின் ஓரத்தில் உறங்கியவள் என்பதை யாராலும் இம்மியளவும் கூடக் கணிக்க முடியாதெனத் தோன்றியது. அவளுக்கும், கல்விக்குமானத் இடைவெளி அவள் தற்போது சாய்ந்திருக்கும் அந்தச் சிறியத் தடுப்பு தான். அதைக் கடந்து செல்லும் வாய்ப்பை, இந்நகரம் அவளுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது. இன்னும் சில வருடங்களில், அந்த மொத்த குடும்பமும், வீதியிலிருந்து முன்னேறி ஒரு வீட்டில் உறங்கலாம். இதே சாலையோரத்தில், நாட்டின் வேறெங்கோவிருந்து மற்றுமொரு குடும்பம் வந்து உறங்கக்கூடும். அங்கிருந்தும், சீருடை அணிந்தபடி ஒரு சிறுமி இதே தடுப்புகளைக் கடந்து வீதிக்குள் நடந்து செல்வாள்.

இந்த நம்பிக்கையே கொல்கத்தாவின் ஆன்மாவெனத் தோன்றுகிறது. அது சிதையாதவரை இந்நகரம் கொல்கத்தாவாக இருக்கும், இப்படியே!

‘மகாநகர்’ திரைப்படத்திலிருந்து ஒரு காட்சி

மேற்படித் தகவல்கள்

[1] – அடிஜிட்டல் இந்தியன் (Undigital Indian) – இந்தியாவின் நவீனத்துவத்தில் ஆர்வமற்ற அருகி வரும் சிறுபான்மை மக்கள். சில உதாரணங்கள் – பேடிஎம் மற்றும் அமேசான் பயன்படுத்தாதவர்கள், ஏ.டி.எம் மற்றும் ரேஷன் கடை வரிசைகளில் நிற்பவர்கள், 3ஜி இல்லாத கைப்பேசி வைத்திருப்பவர்கள், வங்கி செலுத்துச் சீட்டுகளை நிரப்பத் தெரிந்தவர்கள், IRCTC இணையதளத்தைப் பயன்படுத்தாதவர்கள் ஆகியோர்.


எழுத்தாளரைப் பற்றி

பாலா, இலக்கியம், திரைப்படங்கள் மற்றும் தொலைந்து போகிற பயணங்களின் மீது ஆர்வம் கொண்டவர். அவ்வப்போது, கவிதைகள் மற்றும் பயணக் கட்டுரைகள் எழுதுவதுண்டு. இவரின் வலைப்பதிவுகளை இங்கே படிக்கலாம் – https://snbalaa.wordpress.com/

ஓவியரைப் பற்றி

திவ்யா மோகன் சினிமா மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தில் ஆர்வமுள்ளவர். தனது கலை ஆற்றல்களைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவரின் படைப்புகளை divyalikestodraw என்கிற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பார்க்கலாம்.

நிழற்படம் எடுத்தவரை பற்றி

கட்டுரையில் வரும் முதல் புகைப்படத்தை எடுத்தவர் லியா வர்கீஸ். இதைப் பற்றி அவர் சொன்னது, “பல ஆண்டுகளுக்குப் பின் வடக்கு கல்கத்தாவுக்கு சென்றபோது, ஒரு பெண் கடவுளின் சிலை ஷோபா பஜார் தெருவில் எடுத்துச்செல்லப்படுவதைக் கண்டேன்.”

லியா வழக்கறிஞராக இருந்து அயர்வுற்றவர். தற்போது Amnesty International India-வில் பணிபுரிகிறார். கையில் டி.எஸ்.எல்.ஆர் காமிராவுடன் பல இடங்களைச் சுற்றிப்பார்த்தல் இவருக்குப் பிடிக்கும். Instagram-ல் அவ்வப்போது புகைப்படங்களை பகிருவார். இவரின் அனுமதியின்றி இப்புகைப்படங்கள் பிரதி எடுக்கக்கூடாது.

Did you like what you read? Support us as we explore film cultures from around the world; experience cinema in new ways with us. Let us keep The World of Apu free for all!

Become a Patron!